விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் ரூ. 300 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம், கடந்த மாதம் 11-ம் தேதி பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியானது. குடும்ப உறவுகளை மையமாக வைத்து, விஜய்யின் 66-வது படமாக இந்தப் படம் உருவாகியிருந்தது. அஜித்தின் ‘துணிவு’ படத்துடன் மோதியப் போதும், இந்தப் படத்திற்கு குடும்ப ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், 26 நாட்களில் இந்தப் படம் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையடுத்து விஜய்யின் ரசிகர்கள் #VarisuHits300Crs என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்த ஆண்டு வெளியாகி 300 கோடி ரூபாய் வசூலை கடந்த முதல் படம் என்ற சாதனையை ‘வாரிசு’ பெற்றுள்ளது. மேலும், விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘பிகில்’ படம் 300 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய நிலையில், தற்போது ‘வாரிசு’ படம் இந்தப் பட்டியலில் அதனைத் தாண்டி முந்தியுள்ளது. தற்போதும் திரையரங்குகளில் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. பிப்ரவரி 17-ம் தேதி தான் தனுஷின் ‘வாத்தி’ படம் ரிலீஸ் ஆகிறது. அதுவரை பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாததால், மேலும் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.