காலம் உண்மையை விரைவில் சொல்லும் என நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வரும் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ள படம் ‘சர்கார்’. இந்தப் படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் முருகதாஸுடன் மூன்றாவது முறையாக விஜய் இணைந்துள்ளார். மேலும் நடிகை வரலட்சுமி சரத்குமார் இதில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது பாத்திரம் குறிப்பிட்ட ஒரு பெண் அரசியல்வாதியை ஆதாரமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் வருவுக்கும் விஜய்க்கும்தான் நேரடி மோதல் இருக்கும் என்றும் கூறுகிறார்கள். சமீபத்தில் வெளியான டீசரில் இவரது கதாப்பாத்திரம் மிகவும் ஈர்க்கும்படியாக இருந்தது.
ஆனால் இந்தப் படம் வெளியாவதற்கு முன்பாகவே பல சிக்கல்கள் எழுந்தன. ‘சர்கார்’ படத்தின் கதையும் தன்னுடைய ‘செங்கோல்’ என்ற கதையும் ஒன்றுதான் என்று வருண் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் பாக்யராஜ் தலைவராக உள்ள தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் சமரச முயற்சிகள் நடந்தன. ஆனால், அங்கு தீர்வு எட்டாத நிலையில் நீதிமன்றம் வரை பிரச்னை சென்றுள்ளது. இயக்குநர் பாக்யராஜ் தனது பக்கத்தை விளக்கியும் வருண் என்பவரை ஆதரித்தும் ஊடகங்களுக்கு ஒரு அறிக்கையும் அனுப்பியிருந்தார்.
இதனிடையே இயக்குநர் முருகதாஸ், “ஒவ்வொரு முறையும் படம் பண்ணும் போது பிரச்னை வருகிறது என்பதை விட, விஜய் உடன் படம் பண்ணும் போது பிரச்னை வருகிறது என்றே சொல்ல வேண்டும். இரண்டு கதையும் ஒன்று என்றால், என் கதையை படித்தார்களா?. அதாவது என்னுடைய முழுக் கதையை, பவுண்டடு ஸ்கிரிப்டை பாக்யராஜ் படித்தாரா? இல்லையா?. என்னுடைய பவுண்டடு ஸ்கிரிப்டை நான் இதுவரை அவர்களிடம் கொடுக்கவே இல்லை. மூலக் கதைக்கான ஸ்கிரிப்டை மட்டுமே பெற்றுச் சென்றார்கள். ஒன்று என்னுடைய முழுத் திரைக்கதையையும் படிக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் படத்தை பார்க்க வேண்டும். நான் படத்தை காட்டுவதாக சொன்னேன். ஆனால், அவர்கள் பார்க்கவில்லை. வெறும் சினாப்சிஸ் கதையை மட்டும் வைத்துக் கொண்டு கருத்து சொல்வது எவ்வளவு பெரிய தவறு. எனக்கு எவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்திருக்கிறீர்கள்.” என்று கேட்டிருந்தார்.
இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் நடிகை வரலட்சுமி, இப்பிரச்னையில் தனது இயக்குநரை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். அவர் தன் பதிவில், “என் நிலைப்பாடு எனது இயக்குநர் பக்கம்தான். உண்மையில் வெல்லும். உண்மைதான் எப்போதும் வெல்லும். காலம் அதை விரைவில் சொல்லும்” என்று தெரிவித்துள்ளார்.