இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர், மறைந்த அப்துல் கலாம் பற்றிய இசை ஆல்பம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. வைரமுத்து எழுதிய பாடலுக்கு ஜிப்ரான் இசையமைக்க, இயக்குனர் வசந்த் சாய் இயக்கியுள்ளார். இந்த ஆல்பத்தை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வெளியிட்டார்.
விழாவில் கவிஞர் வைரமுத்து பேசும்போது, ‘அப்துல் கலாம், இறந்தபோது இந்தியாவில் இருக்கும் எல்லா சட்டமன்றங்களும் இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றின. அதில் எனக்கு பிடித்தது, ’19ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் விவேகானந்தர், 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் காந்தி, 21ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் அப்துல் கலாம்’ என்ற ஆந்திர அரசின் தீர்மானம்தான். கலாம் குடியரசு தலைவர் என்பதற்காகவோ, விஞ்ஞானி என்பதற்காகவோ நினைக்கப்படவில்லை. சொல்லுக்கும், செயலுக்கும் இடைவெளி இல்லாத மனிதர் என்பதற்காகத்தான் நினைக்கப்படுகிறார். நாட்டில் தண்ணீர், உணவு பஞ்சங்களை விட நல்ல தலைவர்கள் பஞ்சம் அதிகம். இந்த பஞ்சத்தில் முளைத்த ஒரு கற்பக விருட்சம்தான் தன்னலமற்ற அப்துல் கலாம்.
சிலர் பதவிக்கு போனதும் தனிமனிதக் கூட்டத்தில் இருந்து தங்களைத் துண்டித்துக் கொள்கிறார்கள். பதவி என்பது உதவி செய்யும் ஒரு துணைக்கருவிதான். பதவி வந்தவுடன் யார் தூங்காமல் இருக்கிறாரோ அவர் தான் தலைவர். அப்துல் கலாம் தன்னை குடியரசு தலைவராக நினைத்துக் கொண்டதில்லை. அறிவு என்பது முயற்சியால் வருவது, ஆற்றல் என்பது பயிற்சியால் வருவது. அறிவாளி ஆவது எளிது, மனிதன் ஆவது தான் கஷ்டம். எவன் ஒருவன் தான் கற்றதை மண்ணுக்கு அளிக்கிறானோ அவர் நினைக்கப்படுகிறான். இந்த நூற்றாண்டில் கலாமினால் விண்ணில் ஒரு புரட்சியும், எம்.எஸ்.சுவாமிநாதனால் மண்ணில் புரட்சியும் அரங்கேறி இருக்கின்றன. கலாமுக்கு சலாம்’ என்றார்.
விழாவில் இயக்குனர் வசந்த் சாய், இசையமைப்பாளர் ஜிப்ரான், அப்துல் கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.