நடிகர் வடிவேலு குரலில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் ‘அப்பத்தா’ பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் தனக்கென நகைச்சுவை பாணி அமைத்து, இன்றளவும் மீம்ஸ் கிரியேட்டர்களால் அதிகம் பேசப்படுபவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. நகைச்சுவை மட்டுமின்றி குணசித்திர கதாபாத்திரம், பாடகர் என தன்னை நிலைநிறுத்திக்கொண்ட நடிகர் வடிவேலு, சிம்புதேவனின் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில் முதன்மையான ஹீரோவாக நடித்து அதிலும் வெற்றிக்கொண்டார்.
வரலாற்று கதை போன்று எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் 2-ம் பாகமான ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, கடந்த 2018-ம் ஆண்டு படப்பிடிப்பும் நடந்துவந்தநிலையில், கருத்து வேறுபாடு காரணமாக படப்பிடிப்புக்கு நடிகர் வடிவேலு நடிக்க வரவில்லை என்று கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர்களான எஸ் பிக்சர்ஸ் சார்பில் ஷங்கரும், லைகா சார்பில் சுபாஷ்கரனும் புகார் அளித்தனர்.
அத்துடன் பல இயக்குநர்களும் நடிகர் வடிவேலு மீது நடிகர் சங்கத்தில் புகார் தர, படத்தில் நடிக்க அவருக்கு ரெட் கார்டு அளிக்கப்பட்டது. இதையடுத்து மாறி மாறி இரு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வந்தநிலையில், ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் இனி எப்போதும் நடிக்கப்போவதில்லை என்று நடிகர் வடிவேலு அறிவித்திருந்தார். அதன்பிறகு வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்ஷேனல் தயாரிப்பு நிறுவனத்தின் ஐசரி கணேஷ் தலையிட்டு இந்தப் பிரச்சனைக்கு கடந்த வருடம் முற்றுப்புள்ளி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் வடிவேலு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தில் கம்பேக் கொடுக்கும் வகையில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, இயக்குநர் சுராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடலான ‘அப்பத்தா’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை நடிகர் வடிவேலுவே பாடியுள்ளார். பாடலின் இறுதியில் நடிகர் பிரபுதேவா வருகிறார்.