“வருஷத்துல 30 நாளாவது நம்ம குடும்பம் தொழில்னு எல்லாத்தையும் விட்டுட்டு ஊர்சுத்தப் போயிடணும்.” - இதான் 'வாழ்' படத்தோட மெசேஜ். இந்த மெசேஜை அழகான கதாபாத்திரங்கள் வழியாகவும், வித்தியாசமான திருப்புமுனைக் காட்சிகள் வழியாகவும் திரையில் சொல்லி இருக்கிறார் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்.
'அருவி' படத்தின் மூலம் தனித்த கவனம் பெற்ற இவர், 'அருவி'யைப் போலவே தனித்த அழகியலுடன் இக்கதையினை அணுகியிருக்கிறார். பிரதீப், பானு, திவா தவான் ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் பிரகாஷ் ஒரு துக்க வீட்டில் பானுவை சந்திக்கிறார். அதன் பிறகிலான காட்சிகளில் நிகழும் ஒரு கொலையின் எதிரொலியாக மகன் யாத்ராவுடன் பானுவும், பிரகாஷும் சேர்ந்து ஒரு தொலை தூரப் பயணத்தை மேற்கொள்கிறார்கள். வளைவு நெளிவுகள் கொண்ட அந்தப் பயணமே 'வாழ்' படத்தின் திரைக்கதை.
ஜன நெருக்கடி கொண்ட இறுக்கமான வாழ்விலிருந்து தற்காலிகமாகவேணும் நம்மை விடுவித்துக் கொள்வது குறித்து பேச முயன்றிருக்கிறார் இயக்குநர். ஆனால், அவர் எதிர்பார்த்த மாயத்தை ரசிகனின் மனதில் 'வாழ்' நிகழ்த்தவில்லை என்றே சொல்லலாம். ஒருவேளை திரையரங்கில் இப்படம் வெளியாகி இருந்தால் அந்த உணர்வு சரியாக கடத்தப்பட்டிருக்கலாம். காரணம் பல்வேறு காடு, மலை, தீவு, அருவிகள் என நல்ல காட்சி அனுபவத்திற்கான முயற்சியாக இந்தப் படம் உள்ளது. அவ்வகையில் ஒளிப்பதிவாளர் ஷெல்லே கேலிஸ்ட் சிறப்பாக பணி செய்திருக்கிறார்.
யாத்ராவாக நடித்திருக்கும் சிறுவன் தனது துறுதுறு நடிப்பால் வசீகரிக்கிறார். பிரகாஷாக நடித்திருக்கும் பிரதீப் நல்ல தேர்வு. தாத்தா சொல்லும் சின்னவயது புறா ப்ளாஷ்பேக் காட்சி அருமை. ப்ரதீப் குமாரின் இசை இதம். ப்ரதீப் குமார் மற்றும் லலிதா விஜயகுமார் ஆகியோரின் குரலில் அருண் பிரபு புருஷோத்தமன் எழுதியிருக்கும் “இன்ப விசை மான்கள் உலா போகுதே...” என்ற பாடலை மீண்டும் மீண்டும் கேட்கலாம்.
பொதுவாக 'அருவி', 'வாழ்' போன்ற அழகியில் சார்ந்த திரைப்படங்கள் அனைவருக்கும் பிடிக்காது. எனவே இவ்வகை திரைப்படங்களுக்கான ஆடியன்ஸ் நிச்சயம் 'அருவி'யைப் போல 'வாழ்' சினிமாவையும் ரசிப்பார்கள். சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் இந்த சினிமா நிச்சயம் தத்துவார்த்த மற்றும் நல்ல காட்சி அனுபவத்தை உங்களுக்குத் தரும்.