செய்தியாளர்: ராம் பிரசாத்
திரையரங்குகளில் மிகுந்த வரவேற்பை பெற்ற வாழை திரைப்படம், தற்போது ஓடிடியில் ரசிகர்களிடையே பேசும்பொருளாகி உள்ளது. மறுபுறம் திரையரங்குகளில் வெளியானதே தெரியாத "போகுமிடம் வெகு தூரமில்லை", ஓடிடியில் வரவேற்பை பெற்று வருகிறது.
மாரி செல்வராஜின் திரைப்படங்கள் எப்போதும் ஒரு அழுத்தமான கதையோடு வரும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதனாலேயே அது எப்போதும் சர்ச்சையையும் சந்திக்கும். இதற்கு அவரது சமீபத்திய படைப்பான வாழையும் இதற்கு விதிவிலக்கல்ல. ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான பின்னர், படம் குறித்த விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் சூடுபிடித்துள்ளன. திரையரங்குகளில் ஓடியபோது அனைவராலும் பாராட்டப்பட்ட இந்த படம், ஓடிடியில் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
குறிப்பாக படத்தின் சுவாரசியமான காட்சிகள் குறைவாக இருப்பதாக குறை கூறுகின்றனர். வாழைக் காய்களை சுமப்பது கஷ்டம் என்பதை திரும்பத் திரும்ப படம் காட்டுவதாகவும், எப்படியாவது பார்வையாளர்கள் அழ வேண்டும் என்று இயக்குநர் செயற்கையாக பல காட்சிகளை அமைத்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன. அதேநேரம், அக்காட்சிகள் கடுமையான உணர்வை பார்வையாளர்களுக்கு கொடுப்பதாகவும் விம்ரசனங்கள் எழுந்துள்ளன.
கல்லூரி படத்தில் வரும் பேருந்து எரிப்பு காட்சி போலவோ, விசாரணை படத்தில் வரும் போலீஸ் டார்ச்சர் போலவோ, இயல்பாகவே தோன்றும் நெஞ்சை உருக்கும் காட்சியமைப்புகள் வாழையில் இல்லை என்று கூறுகின்றனர் ரசிகர்கள்.
வாழை படம் குறித்த விமர்சனங்கள் இருந்தாலும், மாரி செல்வராஜின் தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் சமூகப் பிரச்னைகள் மீதான அக்கறை என்பவை பாராட்டுக்குரியவை. ஆனால் விமர்சகர்கள் கருத்தை பார்த்து, மற்றுமொரு பரியேறும் பெருமாள் மாதிரி ஒரு படத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்குதான் ஏமாற்றம் கிடைத்துள்ளது.
முன்னதாக தியேட்டரில் இப்படம் வெளியானபோது, இப்படத்தை பலரும் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
ஒருபுறம் வாழையை இப்படி விமர்சிக்கும் ரசிகர்கள், மறுபுறம் "போகுமிடம் வெகு தூரமில்லை" படத்தை கொண்டாடி வருகின்றனர். வாழை மற்றும் கொட்டுக்காளி படங்களோடு வெளியானதுதான் போகுமிடம் வெகு தூரமில்லை. இப்படி ஒரு படம் ரிலீஸானது என்றே பலருக்கும் தெரியாது. அந்த அளவிற்கு வாழைக்கும், கொட்டுக்காளிக்கும் அதன் படக்குழுக்கள் புரோமோஷன்கள் செய்தனர். இந்நிலையில், தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ள ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
விமல் - கருணாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் மைக்கேல் K.ராஜா இந்த படத்தை இயக்கியுள்ளார். முதல் படம் என்றே தெரியாத அளவிற்கு திரைக்கதையை அமைத்திருப்பார் இயக்குநர். முக்கியமாக கருணாஸின் நடிப்பை பாராட்டி பலரும் பதிவிட்டு வருகின்றனர். கதையின் கருவை இறுதிக் காட்சியில் இணைத்த விதம் அனைவரின் கைத்தட்டல்களையும் அள்ளியது.
நடிப்பு, பிண்ணனி இசை, எழுத்து என இறுதிக்காட்சி உணர்ச்சிக்குவியலாக வெற்றிபெறுகிறது. பல உலக சினிமாக்கள் வசூல் ரீதியாக வெற்றி அடையாவிட்டாலும், ரசிகர்கள் மனிதல் நீங்கா இடம் பிடித்துள்ளது. அந்த இடத்தில் போகுமிடம் வெகு தூரமில்லை படத்திற்கு ஒரு இடமுண்டு எனலாம்..