கந்துவட்டி என்ற வார்த்தையை கொச்சையாக பார்க்காதீர்கள்: சீமான்

கந்துவட்டி என்ற வார்த்தையை கொச்சையாக பார்க்காதீர்கள்: சீமான்
கந்துவட்டி என்ற வார்த்தையை கொச்சையாக பார்க்காதீர்கள்: சீமான்
Published on

கந்து வட்டியை ஒரு கொச்சையான வார்த்தையாக சொல்வதை தான் வெறுக்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 

புதிய தலைமுறையில் சீமான் அளித்த பேட்டியில் அசோக்குமார் மரணம் குறித்தும், அன்புச் செழியன் மீதான குற்றச்சாட்டு குறித்தும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். 

சீமான் பேசுகையில், “அதிகப்படியான வட்டி. அவ்வளவு தான். தனி முதலாளி வட்டிக்கு கொடுக்கும் போது முறைப்படுத்தப்படாததால் அதிக வட்டிக்கு தருகிறார்கள். இது நீண்ட காலமாகவே அனுமதிக்கப்பட்டும் வருகிறது. கந்து வட்டியை ஒரு கொச்சையான வார்த்தையாக சொல்வதை தான் வெறுக்கிறோம். மார்வாடி, மலையாளி, மராத்தி கொடுத்தால் பைனான்ஸ், தமிழர்கள் கொடுத்தால் கந்துவட்டியா?. கந்துவட்டி தொழில் இல்லை என்றால் சினிமா தொழில் இயங்குவது கடினம். மாற்று என்ன வென்று தேடிக் கொண்டு தான் இதனை ஒழிக்கணும்.  

அசோக்குமார் யாரிடமும் சொல்லாமல் இந்த முடிவை எடுத்தது தான் வருத்தமாக உள்ளது. நான் இங்கு தயாரிப்பாளராக இருக்கிறேன் என்றால் அதற்கு அன்பு அண்ணன் தான் காரணம் என்று ஒரு நிகழ்ச்சியில் விஷால் சொல்லி இருக்கிறார். காசு கொடுக்கும் போது கடவுளா இருந்தவர் தற்போது வில்லனாக ஆகிவிட்டாரா.

அசோக்குமாரின் மரணத்தில் அன்புச் செழியனிடம் கடன் வாங்கிய பலர் மறைந்து கொள்ள முயற்சிப்பது தான் தெரிகிறது. இந்த பிரச்சனையை பயன்படுத்தி விஷால் பணத்தை கொடுக்காமல் இருக்க முயற்சிக்கிறார். நான் அன்புச் செழியனை ஆதரிக்கவில்லை உண்மையை பேசுகிறேன். சாதாரண மனிதனையும் தயாரிப்பாளர் ஆக்கியவர் அன்புச் செழியன். 

இருப்பதிலே கடுமையான கந்து வட்டி ஜி.எஸ்.டி தான். அதனை ஏன் யாரும் எதிர்க்கவில்லை. திரைத்துறைக்கு விதிக்கப்பட்ட 28 சதவீதம் வரிக்கு எதிராக விஷாலின் போராட்டம் என்ன?. ஏன் அதற்கு போராடவில்லை. நியாயமாக பார்த்தால் ஜிஎஸ்டி வரிதான் மிகப்பெரிய பாதிப்பு. நான் சத்தியத்தின் மகன். நியாயத்தை பேசவேண்டும் என்று நினைக்கிறேன். அன்புச் செழியன், கோத்ரா போன்றோர் வசூலிக்கும் அதிகப்படியான வட்டியை நான் சரி என்று சொல்லவில்லை. 

எல்லாம் தெரிந்து தான் அன்புச் செழியனிடம் வட்டிக்கு பணம் வாங்குகிறோம். வேறு வழியில்லை என்று தான் அவரிடம் செல்கிறோம். தவிர்க்க முடியவில்லை. கொடுமையானவர்கள் என்றால் விலகி நிற்க வேண்டியது யாருடைய பொறுப்பு.  அன்புச் செழியன் போன்ற கந்துவட்டிக்காரர்கள் பணம் கொடுக்கவில்லை என்றால் சினிமா துறை எப்படி இயங்கும். யாரிடம் பணம் இருக்கிறது. இந்த மாதிரி முதலாளிகளை நம்பித் தான் சினிமா துறை இயங்கி வந்தது.

அன்புச் செழியன் போன்றோர் மண்ணின் மைந்தர்கள் என்பதால் உள்ளூரில் வேர் இருப்பதால் அதனை வைத்து கடுமையாக நடந்து கொள்கிறார்கள். இந்த அணுகு முறையில் உள்ள தவறுகளை களைய வேண்டும். அமீர், கரு.பழனியப்பன் போன்றோர் தங்கள் ஆதங்கத்தை தான் வெளிப்படுத்துகிறார்கள். அவ்வளவு தான் செய்ய முடியும். செயல்படுத்துவது அதிகாரத்தின் கைகளில் தான் உள்ளது. 

அன்புச் செழியனிடம் காசு வாங்கியவர்கள் எதிர்க்கிறார்கள். நான் ஏன் எதிர்க்க வேண்டும். அவரிடம் நான் எதனையும் பெறவில்லை. அன்புச் செழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. வட்டிக்கு கொடுப்பதை முழுவதுமாக ஒழிக்க முடியாது என்று தான் சொல்கிறேன்” இவ்வாறு கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com