மணிரத்னம் இயக்கத்தில் தயாராகிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து, அந்தப் படத்தில் பணியாற்றுபவர்கள் பேசுகையில், “அழகு, வியப்பு, பிரம்மிப்பு உள்ளடக்கியதே பொன்னியின் செல்வன்” என்று கூறி சிலிர்க்கின்றனர்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, பார்த்திபன், சரத்குமார், நிழல்கள் ரவி, ரகுமான் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் இடம்பெறும் ஜெயம் ரவியின் காட்சிகள், சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தன. அதேபோல் தற்போது நடிகர் கார்த்தியின் வசனக் காட்சிகளும் முடிந்துவிட்டன. இந்தநிலையில் குவாலியரில் மற்ற நடிகர்களின் இறுதிக்கட்ட கட்சி காட்சிகளை பிரம்மாண்ட அரண்மனைகளில் மணிரத்னம் படமாக்கி வருகிறார். அந்த படப்பிடிப்பும் ஓரிரு நாட்களில் முடியவுள்ளது.
இந்த நிலையில்தான், பொன்னியின் செல்வன் படத்தில் பணிபுரிந்தவர்கள் படத்தை பற்றி விவரிக்கையில் ‘அழகு, வியப்பு, பிரம்மிப்பு... இதுவே பொன்னியின் செல்வன்’ என கூறுயுள்ளனர்.இதை அவர்கள் விவரித்துக்கூறும்போது, “ஜெயம்ரவியின் தோற்ற அழகு, கார்த்தியின் குதிரை ஓட்டும் அழகு, விக்ரமின் கரிகால கம்பீரத்தின் அழகு, ஐஸ்வர்யா ராயின் இயல்பான அழகு ஆகியவை ரசனையாக அமைந்துள்ளன. அதேபோல மிகப் பெரிய கதையை, இரண்டு பாகங்களாக உருவாகும் படத்தை, வெறும் 120 நாட்களில் மணிரத்னம் படமாக்கியுள்ளார். இந்தப் படம் தொடங்கி ஒன்றரை வருடங்கள் ஆனாலும், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சுமார் 120 நாட்கள் மட்டுமே நடைபெற்றுள்ளன.
பெரும் வலிமைமிக்க ஒரு பிரம்மாண்டமான கதையை, அதுவும் ஒரு படத்தின் இரண்டு பாகங்களையும் குறைந்த நாட்களில் படமாக்குவது என்பது, மணிரத்னத்தால் மட்டுமே சாத்தியம். வரலாற்றுப் பின்னணி கொண்ட படங்கள், இரண்டு வருடங்கள், மூன்று வருடங்கள் என படமாக்கப்படும் நிலையில், இரண்டு பாகங்களை மிக மிகக் குறைந்த நாட்களில் படமாக்கியது இதுவே முதல்முறை” எனக்கூறி ஆச்சரியப்படுகின்றனர். குறிப்பாக, அரங்கங்களை பெரும்பாலும் தவிர்த்து இயற்கையான இடங்களிலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, கொரோனா காலத்தில்கூட இதை மணிரத்னம் பாதுகாப்பாக நடத்தியிருப்பதாக சொல்கின்றனர்.
இப்படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியும் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளன என அவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, அரண்மனை காட்சிகள், போர் காட்சிகள் இவை அனைத்தும் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் என உறுதியாக கூறுகின்றனர். இதற்காக படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞர்களும் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிகிறது.
இதுபற்றி தெரிவிக்கையில், “பொன்னியின் செல்வன் என்ற ஒரு பிரம்மாண்டம், மணிரத்னம் என்ற ஒருவரால் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. தமிழ் திரையில் பலரும் இந்த கதையை படமாக்க நினைத்திருந்தாலும், அவர்களின் கனவை தன்னுடைய நேர்த்தியான சாமர்த்தியத்தால், சாத்தியமாக்கியுள்ளார் மணிரத்னம்” எனும் அவர்கள், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி இடம்பெறும் ஒரே ஒரு பாடல் காட்சி படமாக்க வேண்டியுள்ளது மட்டுமே மீதமிருப்பதாக தெரிவிக்கின்றனர். அத்துடன் முழு படப்பிடிப்பும் நிறைவடையும் என தெரிவிக்கின்றனர். கார்த்தியின் இந்தப் பாடல் நீலமலைத் திருடன் படத்தில் இடம்பெற்ற ‘சத்தியமே லட்சியமாய் கொள்ளடா’ என்ற பாடல் போன்று படமாக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கான படப்பிடிப்பு விரைவில் பொள்ளாச்சி அல்லது மைசூர் பகுதியில் நடைபெறும் என தெரிவிக்கின்றனர்.
இப்போதைக்கு 98 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதால் இறுதிக்கட்ட பணிகளை விரைவில் துரிதப்படுத்தவும் படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அத்துடன் நாவலில் இருந்த சுவாரஸ்யம், நிச்சயம் திரையில் பிரதிபலித்து மாயம் செய்யும் எனவும் உறுதிபட தெரிவிக்கின்றனர்.
இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமுடியை நீளமாக வளர்த்து, கொரோனா போன்ற இயற்கை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் கட்டுமஸ்தான உடலமைப்புடனும், தோற்றம் மாறாமல் பேணிக்காப்பதும் கடினமாக இருந்துள்ளது. அத்துடன் மனதளவில் தளர்ச்சியும் அடைந்துள்ளனர். அதற்கும் மேல் பொன்னியின் செல்வன் படத்திற்காக பல படங்களின் வாய்ப்புகளை தவறவிட்டுள்ளனர். படத்துக்கு பணியாற்றிய பல தொழிலாளர்களுக்கு இது பொருந்தும். இதன் மூலம் பொருளாதார இழப்பையும் அவர்கள் சந்தித்துள்ளனர். இருப்பினும் கொஞ்சமும்மனம் தளராமல், ‘தமிழில் பொன்னியின் செல்வன் படம் போல் இதுவரை வந்ததில்லை. இனியும் வரப்போவதில்லை’ என்ற உற்சாகத்துடன் தெரிவிக்கிறார்கள் அனைவரும்.
- செந்தில்ராஜா