தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர், ராம்சரண். இவர், தற்போது பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்காக இப்போது முதலே பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ‘கேம் சேஞ்சர்’ படத்திற்குப் பிறகு ராம்சரண் தற்போது புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்திற்கு தற்போது, ’ஆர்.சி16’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் ராம்சரண் தனது அடுத்த படத்தின் இயக்குநரான புச்சி பாபு சனாவுடன் ஆந்திராவின் கடப்பாவுக்குச் சென்று அங்குள்ள பிரபல கோயில் மற்றும் தர்காவில் வழிபாடு நடத்தினார்.
அந்த வகையில், ஸ்ரீவிஜய துர்கா தேவி கோயில் பிரார்த்தனை செய்த ராம் சரண், அடுத்து அமீன் பீர் தர்காவிலும் வழிபாடு செய்தார். மேலும் அங்கு முஷைரா கஜல் நிகழ்விலும் அவர் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். ராம் சரண் வரும் செய்தியை அறிந்த ரசிகர்கள் அப்பகுதியில் அதிகளவில் திரண்டு விட்டனர். அவர்களை கட்டுப்படுத்த போலீஸார் தடி அடியும் நடத்தினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் சிறிது பரபரப்பையும் ஏற்படுத்தியது.
முன்னதாக, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த ஆண்டு ராம் சரணிடம் “அமீன் பீர் தர்காவுக்கு நீங்கள் செல்ல வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தாகவும், அதை நிறைவேற்றும் வகையிலேயே ராம் சரண் அங்குச் சென்று பிரார்த்தனை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சபரிமலைக்கு மாலை போட்டிருக்கும் ராம் சரண், தர்காவுக்குச் சென்று வழிபாடு நடத்தியது கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதற்கு ராம் சரணின் மனைவி உபாசனா, கணவர் தர்காவுக்குச் சென்ற படத்தைப் பகிர்ந்து பதிலளித்துள்ளார். அதன்படி அவர் தனது எக்ஸ் தளத்தில், "நம்பிக்கை எப்போதும் ஒன்றுபடுத்தும்; பிளவுக்கு வழிசெய்யாது. இந்தியர்களாகிய நாம் தெய்வீகத்திற்கான அனைத்துப் பாதைகளையும் மதிக்கிறோம். நமது பலம் ஒற்றுமையில் உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.
இதற்குப் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், ஒருசிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். பயனர் ஒருவர், ”ஐயப்பனுக்கு மாலை போட்டுள்ளார். இதனால் அங்கு பின்பற்ற வேண்டிய விதிகள் நிறைய உள்ளன. அவர், தவறு செய்துள்ளார். இது ஐயப்ப சுவாமி பக்தர்களை காயப்படுத்துகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
அதற்கு உபாசனா, ‘நல்லிணக்கத்தை தழுவுதல்: சபரிமலையின் தனித்துவ பாரம்பரியம் - வாவர் மசூதியில் பிரார்த்தனை’ என்று தலைப்பிட்ட ஒரு ஆங்கில கட்டுரையை பகிர்ந்து, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி உள்ளார்.