தமிழக அரசு திரையரங்குகளை திறக்க அனுமதியளித்தாலும் புதிய படங்கள் வெளி வராததால் மதுரை உட்பட பல மாவட்டங்களில் திரையரங்குகள் இயங்கவில்லை.
மதுரை மாவட்டம்: கொரோனா 2 ஆம் அலை தொடங்கிய காலத்தில் மூடப்பட்ட திரையரங்குகளை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று முதல் திறக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது, இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 90 சதவீத திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடப்படவில்லை.
மாவட்டத்தில் 10 சதவீத திரையரங்குகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. புதிய திரைப்படங்கள் வராத காரணத்தால் திரையரங்குகளில் திரைப்படம் திரையிடவில்லை எனவும், வெள்ளிக்கிழமை புதிய திரைப்படங்கள் வரும் பட்சத்தில் திரையரங்குகள் வழக்கம் போல செயல்படும் எனவும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டம்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகள் திறக்கப்பட்டன. ஆனால், புதிய திரைப்படங்கள் வெளியாகாத நிலையில், ரசிகர்களின் வருகையின்றி வெறிச்சோடியே காணப்பட்டது. 4 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு தயாராக இருந்தாலும் புதிய படங்கள் எதும் வெளியிடாத நிலையில் வரும் நாட்களில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் பட்சத்தில் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருவார்கள் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று சினிமா தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. புதிய படங்கள் எதுவும் கையில் இல்லாததால் தியேட்டர் உரிமையாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். ஏற்கெனவே ஒடிடியில் வந்த படங்களை மட்டுமே வைத்துள்ளார்கள் இதனை மீண்டும் திரையிட்டால் வாடிக்கையாளர்கள் கூட்டம் வராது. ஆகவே புதிய படங்களை வாங்கி திரையிட முடிவு செய்துள்ளதால் வரும் 1ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் திரையரங்குகளில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் மட்டும் செயல்படுகிறது. மற்ற திரையரங்குள் திறக்கப்படவில்லை. இது குறித்து, திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர், சக்தி சுப்பிரமணியம் கூறுகையில்... தியேட்டர்களை இயங்க அனுமதி அளித்த தமிழக அரசுக்கு முதலில் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
தற்போது தியேட்டர்களை சுத்தம் செய்யும் பணிகள் நடப்பதால் இன்று 30 சதவீத தியேட்டர்கள் மட்டுமே இயங்குகிறது. வரும் 3ம் தேதிக்கு மேல் 100 சதவீதம் இயங்கும். பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தியேட்டரில் பணியாற்றும் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதை படம் பார்க்க வருபவர்கள் தெரிந்து கொள்ள பணியாளர்களின் உடைகளில் தடுப்பூசி செலுத்தி கொண்டேன் என்ற வாசகம் இருக்கும்.
தியேட்டரில் ரிலீசுக்கு தயாராக 40 படங்கள் காத்திருப்பில் உள்ளது. மக்களும் தியேட்டருக்கு வர ஆர்வமாக உள்ளனர். அரசு அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி திரையரங்ககள் இயங்கும் என்றார்.