‘கோப்ரா’ படத்தைத் தொடர்ந்து அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹாங்ஸ் நடிப்பில், 1994-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் ‘தி ஃபாரஸ்ட் கம்ப்’. ஆஸ்கர் விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை அள்ளிய இந்தத் திரைப்படத்தின், அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் தான் ‘லால் சிங் சத்தா'. இந்தப் படத்தில் கதாநாயகனாக அமீர்கானும், அவருக்கு ஜோடியாக கரீனா கபூரும் நடித்துள்ளனர். அமீர்கானின் நண்பராக, ராணுவ வீரராக நாக சைதன்யா இந்தப் படத்தில் நடித்துள்ளதன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.
அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இந்தப் படம், கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக படம் வெளியிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டு வந்தநிலையில், ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தப் படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே அதே தேதியில் தான், நடிகர் விக்ரமின் ‘கோப்ரா’ படமும் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தான் வெளியிடுகிறது. ஒரே நாளில் வெளியாகும் இரண்டுப் படங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸே கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ‘லால் சிங் சத்தா’ படம் இந்தி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்பட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாவதை முன்னிட்டு, நடிகர்கள் சிரஞ்சீவி, நாக சைதன்யா, இயக்குநர்கள் ராஜமௌலி, சுகுமார் ஆகியோருக்கு ஐதராபாத்தில் சிறப்பு திரையிடல் காட்சியையும் அமீர்கான் காண்பித்துள்ளார். இந்தப் புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன.