போனி கபூர் தயாரிக்கும் ’ஆர்டிகிள் 15’ தமிழ் ரீமேக் படப்பிடிப்பில் உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் இணைந்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கும்முன் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறது படக்குழு.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஃபிலிம் பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பாராட்டுக்களையும் குவித்தப் படம் ‘ஆர்டிகிள் 15’. ஏழைச்சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்படுவதும், அதனை விசாரிக்கும் அதிகாரிக்கு, சாதிய உணர்வுகொண்ட காவலர்களாலேயே சாதியின் பெயரால் தடங்கல்கள் வருவதும், அதனை அந்த அதிகாரி முறியடித்து நடவடிக்கை எடுப்பதுமே ’ஆர்ட்டிகிள் 15’. சாதியத்திற்கும் சாதியவாதிகளுக்கும் எதிராக சினிமா மூலம் சாட்டையை சுழற்றியிருந்தார், இதன் இயக்குநர் அனுபவ் சின்ஹா. இப்படத்தில், மனிதாபிமான காவல்துறை அதிகாரியாக நடித்த ஆயுஷ்மான் குரானாவுக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் அதிகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடிகர் நாசரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதன், தமிழ் ரீமேக் உரிமையை போனிகபூர் வாங்கியுள்ளார். தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க அருண்ராஜா காமராஜ் இயக்கவிருக்கிறார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பும் கடந்த ஆண்டு வெளியானது.
இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் முடிவடந்ததையடுத்து உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் இன்று கலந்துகொண்டார். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கிற்க்கு மொத்த படக்குழுவும் 1 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.