தனது மகள்களை சிறுவயதில் கடத்த சிலர் திட்டமிட்டு இருந்ததாக நடிகர் கமல்ஹாசன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனக்கு பிடித்த 70 திரைப்படங்களின் பட்டியலை ஆங்கில நாளிதழ் ஒன்றில் பகிர்ந்து கொண்டார் கமல். அதில், பராசக்தி, செம்மீன், அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே, தற்போது வெளியான தங்கல் திரைப்படம் வரை குறிப்பிட்டு இருந்தார். இந்தப் பட்டியலில் மகாநதி படமும் இடம்பெற்று இருந்தது.
அந்தப் படம் உருவாகிய பின்னணி குறித்து கமல் கூறுகையில், “கடந்த 1994 ஆம் ஆண்டு ‘மகாநதி’ படத்தில் நடித்தேன். படத்தில் எனது மகளை சிலர் கடத்திச் சென்று கொல்கத்தா விபச்சார விடுதியில் விற்றுவிடுவார்கள். தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு மகளைக் கண்டுபிடித்து அழைத்து வருவேன். பிறகு மகள் கடத்தலுக்கு காரணமானவர்களை பழிக்குப்பழி வாங்குவதாக அந்தக் கதை அமைக்கப்பட்டிருந்தது. அதுபோன்ற சம்பவம் எனது மகள்களுக்கு நிஜமாகவே நடக்கவிருந்தது. எனது வீட்டில் வேலை செய்த சிலர் என் மகள்களை கடத்த சதி திட்டம் தீட்டினர். அதற்கான உளவு வேலைகளும் நடந்தது. எதிர்பாராதவிதமாக இதன் முழுவிவரமும் எனக்கு முன்பே தெரியவந்தது. நான் கடும்கோபம் அடைந்தேன். மகள்களின் பாதுகாப்புக்காக சம்பந்தப்பட்டவர்களை கொன்றுவிடவும் தயாராக இருந்தேன்” என்று கூறினார்.
மேலும், “கோபத்தைவிட நல்லவிதமாக சிந்திப்பதே நல்லது என்பதை பிறகு உணர்ந்தேன். மகாநதி படத்துக்கு பதிலாக புதிய ஸ்கிரிப்ட் எழுதுவதற்காக ஒரு மாதம் காலதாமதம் செய்தேன். பிறகு அந்த ஸ்கிரிப்ட்டை எழுதி முடித்தேன். இன்றுவரை இதுபற்றி நான் யாரிடமும் வெளியில் சொல்லவில்லை. இப்போது என் மகள்கள் ஸ்ருதியும், அக்ஷராவும் தங்களை காத்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்கள். நான் சொல்வதை புரிந்துகொள்ள தெரிந்திருக்கிறார்கள். அதனால்தான் இந்த விஷயத்தை இப்போது சொல்கிறேன்” என்று கமல் கூறினார்.