'சர்கார்' திரைப்படத்தின் கதை தன்னுடையது என வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவரது குற்றச்சாட்டை ‘சர்கார்’ படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்தார். 42 நாட்கள் கடுமையாக உழைத்து முருகதாஸுடன் இணைந்து ‘சர்கார்’ படத்தின் கதையை உருவாக்கியதாக கதாசிரியர் ஜெயமோகன் தெரிவித்தார்.
இந்த நிலையில் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்து கொள்வதாக முருகதாஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பட டைட்டிலில் வருண் ராஜேந்திரனுக்கு நன்றி தெரிவிக்கவும் படக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இருதரப்பினர் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து ‘சர்கார்’ படக் கதை தொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்டதால் நவம்பர் ஆறாம் தேதி படம் வெளியாக எந்தத் தடையுமில்லை.
இதுதொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “வழக்கம் போல் நிறைய வதந்தி இஷ்டத்துக்கு பரவிக்கிட்டு இருக்கிறது. அதற்கான ஒரு சின்ன விளக்கம்தான் இது. பாக்யராஜ் என்னை அழைத்து இதுபோன்ற ஒரு பிரச்னை சென்றுகொண்டிருக்கிறது எனக் கூறினார். கள்ள ஓட்டு பிரச்னையை மையமாக வைத்து 10 வருடங்களுக்கு முன்பு அருண் என்பவர் ஒரு கதையை பதிவு செய்துள்ளார். மற்றபடி இந்தக் கதைக்கும், அந்தக் கதைக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது"
"ஆனால், நமக்கு முன்னாடி ஒரு உதவி இயக்குநர் இப்படியொரு மூலக்கதையை பதிவு செய்திருக்கிறார். அவரை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் படத்தின் தொடக்கத்தில் ஒரு கார்டு போடுங்கள் என்று சொன்னார். சரி என்று நான் ஒத்துக் கொண்டேன். அந்த வகையில் மட்டுமே அவர் பெயர் வரும். மற்றபடி இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஏ.ஆர்.முருகுதாஸ்தான். அதில் எந்தமாற்றமும் இல்லை.” என்று கூறினார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குநர் பா.ரஞ்சித் " சினிமாவில் கதை திருட்டு விவகாரம் பெரிய சவாலாக இருக்கிறது. திரைக்கதை எழுதுவோர் தவறாமல் அதனை பதிவு செய்ய வேண்டும். கதை திருட்டு விவகாரத்தில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் பொய்யும், உண்மையும் கலந்தே உள்ளது. சேலம் ராஜலட்சுமி கொலை வழிக்கில் முதல் தகவல் அறிக்கை மேலோட்டமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சுவாதி, நிர்பயா விவகாரத்தில் இருந்த அரசியல் அழுத்தம் ராஜலட்சுமி கொலை வழிக்கில் இல்லை" என தெரிவித்தார்.