பாலியல் புகார் சர்ச்சையில் சிக்கியுள்ள ஹார்வி வெய்ன்ஸ்டீன் ஆஸ்கர் விருது பெற்றவர்.
பல்ப் ஃபிக்ஷன், கிளர்க்ஸ், உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை தயாரித்து ஹாலிவுட் திரையுலகில் தனக்கென தனி முத்திரை
பதித்தவர் ஹார்வி வெயின்ஸ்டீன். 65 வயதான இவர் கடந்த 30 ஆண்டுகளாக ஹாலிவுட்டில் செல்வாக்குப் பெற்ற பிரபலமாக
திகழ்ந்து வருகிறார். தயாரிப்பாளர், இயக்குநர் என பல முகங்களை கொண்டவர். 1999 ஆம் ஆண்டு இவர் தயாரித்த ஷேக்ஸ்பியர் இன்
லவ் என்ற திரைப்படத்துக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டதும், வெயின்ஸ்டீனின் புகழ் உச்சியை தொட்டது. இதனால் திரையுலகில்
பெரிய ஜாம்பவானாக வலம் வந்தார். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்ததன் மூலம், அரசியல்வாதிகள் மத்தியிலும் அதிகமாக
பேசப்பட்டார்.
இந்தச் சூழலில் கடந்த வாரம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட ஒரு செய்தி, அவரது ஒட்டுமொத்த செல்வாக்கையும்
அப்படியே புரட்டி போட்டுவிட்டது. திரையுலகில் பல்வேறு கனவுகளுடன் காலடி எடுத்து வைக்கும் பல இளம் நடிகைகளை கடந்த 30
ஆண்டுகளுக்கும் மேலாக சீரழித்தவர் என்ற செய்தியை அந்த பத்திரிகை வெளியிட்டதும், இதுவரை மவுனமாக இருந்த பாதிக்கப்பட்ட
நடிகைகள், அவருக்கு எதிராக அடுக்கடுக்கான பாலியல் புகார்களை தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.