‘சொல்வது போல் நடப்பதில்லை’ - சிரஞ்சீவி படத்திலிருந்து விலகியது குறித்து த்ரிஷா

‘சொல்வது போல் நடப்பதில்லை’ - சிரஞ்சீவி படத்திலிருந்து விலகியது குறித்து த்ரிஷா
‘சொல்வது போல் நடப்பதில்லை’ - சிரஞ்சீவி படத்திலிருந்து விலகியது குறித்து த்ரிஷா
Published on

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் படத்திலிருந்து விலகியது தொடர்பாக நடிகை த்ரிஷா அவரது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சீனியர் நடிகை த்ரிஷா. அவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘பேட்ட’. திரைத்துறைக்கு இவர் வந்ததில் இருந்து ரஜினியுடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு அமையவே இல்லை. அந்த வாய்ப்பை நிறைவேற்றிய படம் ‘பேட்ட’. அதேபோல் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பரமபதம் விளையாட்டு’ விரைவில் வெளியாக உள்ளது.

இதற்கான நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ளவில்லை என்பதால் ஒரு சர்ச்சை எழுந்தது. தயாரிப்பாளர் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படையாக முன் வைத்தார். அதேபோல், இவரது கேரக்டர் வடிவமைத்ததில் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக இவர் தெலுங்கு படத்திலிருந்து திடீரென்று விலகினார் என்ற செய்தி வெளியானது. இது குறித்து த்ரிஷா எந்த விளக்கத்தையும் அளிக்காமல் இருந்து வந்தார்.

தெலுங்கு நடிகரான சிரஞ்சீவியின் ‘சிரு 152’ படத்தில் த்ரிஷா, நடிப்பதாக இருந்தது. ஆனால், அப்படத்தில் நடிப்பதில் கருத்துவேறுபாடு தொடர்ந்ததால் அவர் விலகிவிட்டதாக தகவல் கசிந்தது. பிறமொழிகளில் அதிகம் கவனம் செலுத்தாமல் தமிழில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தி வந்த த்ரிஷா, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இணைவதால் பெரிய எதிர்பார்ப்பு டோலிவுட் வட்டாரத்தில் எழுந்தது.

இந்நிலையில் ,சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகியது தொடர்பாக த்ரிஷா அவரது ட்விட்டர் பக்கத்தில் தனது விளக்கத்தை வெளியிட்டுள்ளார். அதில், “சில நேரங்களில் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள், விவாதிக்கப்பட்ட விஷயங்களிலிருந்து திடீரென்று வித்தியாசமாக மாறும். படைப்பு சார்ந்த சில வேறுபாடுகளால், சிரஞ்சீவியின் படத்தில் நான் ஒரு பகுதியாக இருக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். ஆனால், அந்தப் படக்குழுவை விரும்புகிறேன். எனது அருமையான தெலுங்கு ரசிகர்களை விரைவில் ஒரு நல்ல படைப்பின் மூலம் சந்திப்பேன் என்று நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தற்போது த்ரிஷா, இயக்குநர் மணி ரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் எழுத்தாளர் கல்கி எழுதிய சோழ பேரரசின் வரலாற்று நாவலை மையமாக வைத்து உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com