ஷாருக்கானின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அரசியல் நோக்கத்தில்தான் ஆர்யன்கான் மீது போதைப்பொருள் வழக்கு தொடரப்பட்டதாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். சிறையில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு 22 நாட்களுக்குப் பிறகுதான் ஜாமீன் கிடைத்தது. இதற்கு பின்பு அரசியல் நோக்கம் இருப்பதாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. பல நடிகர்களும் இதே கருத்தை முன்வைத்திருந்தனர். ஆர்யன்கான் வழக்கு ஒரு அரசியல் நோக்கம் என மலையாள நடிகர் டோவினோ தாமஸும் ஒரு நேர்க்காணலில் கூறியுள்ளார்.
பாலிவுட் ஹங்கமா சேனலில் ஒரு நேர்க்காணலில் பங்கேற்ற மலையாள நடிகர் டோவினோ தாமஸிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு டோவினோ, '’அதுதான் அவர்கள் நோக்கம் என நினைக்கிறேன். எனக்கு தெரிந்தவரை, இது ஷாருக்கான் மற்றும் அவரது மகனின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அரசியல் நோக்கம் என்றுதான் தெரிகிறது. நான் அப்படி உறுதியாகக் கூறவில்லை. ஆனால் அப்படித்தான் தெரிகிறது’’ என்று கூறியுள்ளார். டோவினோ தாமஸின் மின்னல் முரளி திரைப்பட வெற்றிக்குப்பிறகு, தற்போது புதிய படங்களில் நடித்துவருகிறார்.