கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘2018’. ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில், டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், நரேன், லால், வினீத் ஸ்ரீனிவாசன், கலையரசன், அபர்ணா பாலமுரளி, தன்வி ராம், ஆசீஃப் அலி உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்ய, நோபின் பால் மற்றும் வில்லியம் பிரான்சிஸ் இசையமைத்திருந்தனர்.
15 முதல் 20 கோடி ரூபாய் என்ற குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘2018’ படம், நிஜ வெள்ள பாதிப்புகளை போன்று தத்ரூபமாக எடுக்கப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றநிலையில், மலையாள திரையுலகில் புதிய சாதனைப் படைத்துள்ளது.
அந்த வகையில், இந்தப் படம், 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து, மலையாள திரையுலகில் அதிகம் வசூலித்த முதல் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. கடந்த 7-ம் தேதி முதல் ஓடிடியில் வெளியானாலும, தற்போதும் திரையரங்குகளில் கூட்டம் நிறைந்தே காணப்படுகிறது.