2009-ம் ஆண்டு முதல் 2014 வரை 6 ஆண்டுகளுக்கான சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறந்த நடிகர் விருது
இதுகுறித்து தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் வெளிடப்பட்டுள்ள அரசாணையில், 2009ஆம் ஆண்டின் சிறந்த நடிகராக மலையன் படத்தில் நடித்ததற்காக கரணும், 2010-ம்ஆண்டில் சிறந்த நடிகராக ராவணன் படத்துக்காக விக்ரமும் பெறுகின்றனர். 2011-ல் சிறந்த நடிகராக வாகை சூடவா படத்துக்காக விமலும், 2012 ஆம் ஆண்டு நீ தானே என் பொன் வசந்தம் படத்தில் ஆம் ஆண்டு நடித்ததற்காக நடிகர் ஜீவாவும் தேர்வாகி உள்ளனர். ராஜா ராணி படத்துக்காக 2013ல் சிறந்த நடிகராக ஆர்யாவும், காவியத் தலைவன் படத்தில் நடித்ததற்காக 2014ஆம் ஆண்டின் சிறந்த நடிகராக சித்தார்த்தும் விருதைப்பெற உள்ளனர்.
சிறந்த நடிகை விருது
2009-ஆம் ஆண்டில் பொக்கிஷம் படத்துக்காக சிறந்த நடிகையாக பத்மப்ரியாவுக்கும், 2010-ல் மைனா படத்தில் நடித்ததற்காக அமலா பாலும், 2011-ஆம் ஆண்டில் வாகை சூடவா படத்துக்காக இனியாவுக்கும் வழங்கப்படுகிறது. 2012-ம் ஆண்டுக்கு கும்கி மற்றும் சுந்தர பாண்டியன் படங்களில் நடித்ததற்காக லட்சுமி மேனனும், 2013-ல் ராஜா ராணி படத்துக்காக நயன்தாராவும் விருது பெறுகின்றனர். காக்கா முட்டை படத்தில் நடித்ததற்காக 2014-ஆம் ஆண்டின் சிறந்த நடிகை விருது ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிடைத்துள்ளது.
சிறந்த இயக்குநர் விருது
2009ஆம் ஆண்டுக்கான சிறந்த இயக்குநர் விருது அங்காடித் தெரு படத்துக்காக வசந்தபாலனுக்கும், 2010-ஆம் ஆண்டில் மைனா படத்துக்காக பிரபு சாலமனுக்கும், 2011-ஆம் ஆண்டில் தெய்வத் திருமகள் படத்துக்காக ஏ.எல்.விஜய்க்கும் வழங்கப்படுகிறது. 2012-ல் வழக்கு எண் 18ன்கீழ் 9 படத்துக்காக பாலாஜி சக்திவேலுக்கும், 2013-ல் தங்க மீன்கள் படத்துக்காக ராமுக்கும் சிறந்த இயக்குனராக தேர்வாகி உள்ளனர். 2014-ஆம் ஆண்டுக்கான சிறந்த இயக்குநர் விருது மஞ்சப்பை படத்துக்காக ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த படத்திற்கான விருது
2009-ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக பசங்க, 2010-ல் மைனா , 2011-ல் வாகை சூடவா, 2012-ஆம் ஆண்டில் வழக்கு எண் 18ன்கீழ் 9, படங்கள் தேர்வாகி உள்ளன. 2013-ஆம் ஆண்டில் ராமானுஜன், 2014-ல் சிறந்த திரைப்படமாக குற்றம் கடிதல் ஆகிய படங்கள் விருதைப் பெறுகின்றன.
சிறந்த நகைச்சுவை நடிகர் விருது
தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை 2009-ஆம் ஆண்டுக்கு கஞ்சா கருப்பும், 2010-ஆம் ஆண்டுக்கு தம்பி ராமையாவும், 2011-ஆம் ஆண்டுக்கு மனோபாலாவும் பெறுகின்றனர். 2012-ஆம் ஆண்டில் சிறந்த நகைச்சுவை நடிகராக சூரியும், 2013-ல் சத்யனும், 2014-ஆம் ஆண்டுக்கான விருதை சிங்கமுத்துவும் பெறுகின்றனர்.
சிறந்த இசையமைப்பாளர் விருது
தமிழக அரசின் திரைப்பட விருதுகளில் 2009-ஆம் ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது சுந்தர் சி.பாபுவுக்கும், 2010-ஆம் ஆண்டுக்கு யுவன் சங்கர் ராஜா மற்றும் 2011-ஆம் ஆண்டுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் விருது பெறுகின்றனர். 2012-ஆம் ஆண்டின் சிறந்த இசையமைப்பாளராக இமான், 2013-ஆம் ஆண்டுக்கு ரமேஷ் விநாயகம், 2014-ஆம் ஆண்டுக்கு ஏ.ஆர். ரகுமானுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.