திரையரங்கில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த அஜித்தின் துணிவு படம் ஓ.டி.டி வெளியீட்டிலும் சக்கப்போடு போட்டு வருகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் மூன்றாவது படமாக உருவாகி வெளியானது துணிவு. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியான துணிவு படத்தை ஒரு மாதம் ஆவதற்குள்ளேயே படக்குழு நெட்ஃப்ளிக்ஸில் வெளியிட்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளிலும் கடந்த பிப்ரவரி 8ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் துணிவு படம் வெளியாகியிருக்கிறது.
தியேட்டரிலேயே இன்னும் துணிவு படம் ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் ஆன்லைன் தளத்திலும் வெளியிடப்பட்டதால் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் பலரும் வரிசைக்கட்டிக் கொண்டு துணிவு படத்தை கண்டு களித்து வருகிறார்கள்.
வங்கியை கொள்ளையடிப்பது போல தொடங்கும் படத்தின் கதை இறுதியில், மக்களின் பணத்தை வைத்து வங்கிகள் என்ன மாதிரியான முறைகேடுகளிலெல்லாம் ஈடுபடுகிறது என்பதை பேசியிருக்கிறது துணிவு. இதற்கு சாமானிய மக்கள் பலரிடையேவும் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் நெட்ஃப்ளிக்ஸ் ஸ்ட்ரீமிங்கில் இந்தியாவில் முதல் இடத்திலும், உலக அளவிலான டாப் 10 பட்டியலிலும் துணிவு படம் இடம் பெற்றிருக்கிறது.
திரையில் வெளியான போதே துணிவு படத்துடன் ரிலீசான வாரிசு படத்தையும் ரசிகர்கள் போட்டியாக பாவித்து எது பொங்கல் வின்னர் என்ற பெரிய வாதமே சமூக வலைதளங்களில் நிலவியது. இதற்கு ஈடுகொடுக்கும் விதமாக தயாரிப்பு நிர்வாகங்கள் தரப்பிலிருந்தும் தத்தம் படம்தான் பொங்கல் வின்னர் என போஸ்டர்களையே வெளியிடப்பட்டிருந்தது.
இப்படி இருக்கையில், அஜித்தின் துணிவு படம் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் போது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கிலும் டாப்பில் உள்ளதால் துணிவுதான் ரியல் வின்னர் என்றேல்லாம் அஜித் ரசிகர்கள் பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.