ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியான படம் துணிவு. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியிலும் இந்த படம் வெளியானது.
ஜிப்ரான் இசையில் மஞ்சு வாரியர், சமுத்திர கனி, ஜான் கோக்கேன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படம் வெளியாகி ஒரு மாதத்தை கடந்தும் இன்றளவும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அஜித்தின் துணிவு படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் கடந்த பிப்ரவரி 8ம் தேதி வெளியாகி அதன் சந்தாதாரர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. தியேட்டர் மற்றும் ஓடிடி என இரண்டிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படமாகவே துணிவு இருப்பதால் சினிமா வட்டாரத்திலும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், நெட்ஃப்ளிக்ஸில் வெளியான துணிவு படம் இந்திய அளவில் டாப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருப்பதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது உலக அளவில் non-English பிரிவில் முதல் மூன்றாவது துணிவு இடம்பெற்றிருக்கிறது. இதுபோக நான்காவது இடத்தில் துணிவு இந்தி பதிப்பும் பட்டியலில் உள்ளது.
அதன்படி நடப்பு வாரத்திலேயே தமிழில் 40 லட்சத்தும் 50 ஆயிரம் மணிநேரமும், இந்தியில் 37 லட்சத்து 30 ஆயிரம் மணிநேரமும் துணிவு படம் பார்க்கப்பட்டிருப்பதாகவும் தரவுகளோடு வெளியிட்டிருக்கிறது தயாரிப்பு நிர்வாகம்.
இதுபோக, இந்தியா, பஹ்ரைன், வங்கதேசம், மலேசியா, மாலத்தீவு, மொரிஷியஸ், நைஜீரியா, ஓமன், பாகிஸ்தான், கத்தார், சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அமீரகம் ஆகிய 13 நாடுகளில் டாப் 10 பட்டியலிலும் துணிவு படம் இடம்பெற்றிருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அஜித் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.