நடிகர் ஷாருக்கானின் மும்பை பங்களாவில் அத்துமீறி நுழைந்ததாக இரண்டு இளைஞர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் கைதுசெய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பங்களாவின் ஒப்பனை அறைக்குள் 8 மணிநேரம் அந்த இரண்டு பேரும் ஒளிந்திருந்தது தெரியவந்துள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் மும்பை பாந்த்ராவில் ‘மன்னட்’ என்று அழைக்கப்படும் ஆடம்பர பங்களாவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி ஷாருக்கானின் பங்களாவிற்குள் அத்துமீறி அதிகாலை நுழைய முயற்சி செய்ததாக இளைஞர்கள் இருவர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், குஜராத்தில் இருந்து ஷாருக்கானை அருகில் பார்ப்பதற்காக அவரது பங்களாவிற்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்ததாக தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து அந்த இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், மன்னட் பங்களாவின் 3-வது தளத்தில் இருக்கும் ஒப்பனை அறைக்குள் கடந்த 2-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நுழைந்ததும், ஷாருக்கானை அங்கே நெருக்கத்தில் பார்த்துவிடலாம் என்று அவர்கள் இருவரும் திட்டமிட்டு அங்கேயே காத்திருந்ததும் தெரியவந்துள்ளது. ஆனால், காலை 10.30 மணிக்கு பங்களாவின் ஒப்பனை அறைக்குள் பராமரிப்பு பணியாளர் சதீஷ் அங்கே வந்தபோது, இரண்டு இளைஞர்கள் அந்த அறைக்குள் பதுங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர், உடனடியாக அவர்கள் இருவரையும் பிடித்து லாபி அறைக்கு அழைத்துச் சென்றதும், பின்பு மேனேஜர் கொடுத்த தகவலின் பேரில், மும்பை போலீசார் வந்து இளைஞர்களை பிடித்துச் சென்றதும் முதல் தகவல் அறிக்கையின் வாயிலாக அம்பலமாகியுள்ளது. கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் இருவரும் சாஹீல் சலீம் கான் (20) மற்றும் ராம் சரஃப் குஷ்வாஹா (22) என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.