‘தேவராட்டம்’ – திரைப் பார்வை

‘தேவராட்டம்’ – திரைப் பார்வை
‘தேவராட்டம்’ – திரைப் பார்வை
Published on

பெண்களை அவமதிப்பவர்களை கருவறுக்க வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்தி இரத்தம் தெறிக்க தெறிக்க வில்லன்களை வேட்டையாடும் திரைப்படமே ‘தேவராட்டம்’.

வக்கீலுக்குப் படித்துவிட்டு எதற்கெடுத்தாலும் விடைத்துக் கொண்டிருக்கும் இளைஞன் வெற்றியாக கவுதம் கார்த்திக். தலை நிறைய முடியையும், உடல் முழுக்க கொலை வெறியையும் சுமந்தபடி திரிகிறார். எப்போதும் கோபம் அடிதடி எனத் திரியும் அவருக்கு, குடும்பம்தான் எல்லாமும். தாய் – தந்தைக்கு நிகராய் அக்காக்களும், அவர்தம் கணவன்மார்களும் அவரைப் போற்றிக் கொண்டாட தர்மத்தின் பக்கத்தில் நின்று அவர் செய்யும் ஒரு செயல் ஒட்டுமொத்த குடும்பத்திற்கே ஆபத்தாகிறது. அதன்பிறகு, என்ன நடக்கிறது என்பதை இரத்தமும், அரிவாளும் கலந்து தனக்கேயுரிய பாணியில் திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் முத்தையா.

‘தேவராட்டம்’ திரைப்படத்தில் கவுதம் கார்த்திக்கின் பாத்திரம் கமர்ஷியலாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு வக்கீல் அனைத்து சட்டதிட்டங்களையும் தெரிந்துகொண்டிருப்பதால் வன்முறையை கையாளலாம் என அவர் தரப்பில் ஒரு நியாயத்தோடு இருக்கிறார். பல இடங்களில் அது கொஞ்சம் ஓவராக இருந்தாலும், சில இடங்களில் ரசிக்கும்படியாக இருக்கிறது. மதுரைப் பெண்ணாக மஞ்சிமா மோகன் பொருந்தினாலும், அவர் கதாபாத்திரம் படத்தில் எந்தவிதமான பயனும் இல்லாமல் இருக்கிறது.

படம் துவங்கும்போது வரும் வேல ராமமூர்த்தியும், மூத்த அக்கா – மாமாவாக வரும் போஸ் வெங்கட், வினோதினி ஆகியோர் சிறப்பான தேர்வு. அதுவும் பாசத்தை கொட்டி கொட்டி வினோதினி நெகிழ வைக்கிறார். சூரியின் காமெடிக்கு கொஞ்சம் சிரிக்கலாம். வில்லனாக பெப்சி விஜயன். பிச்சை எடுக்கும் அறிமுகக் காட்சியில் தொடங்கி, அவரது மகனின் வெட்டுப்பட்ட சட்டையைப் பார்த்துக் கொண்டிருப்பது வரை முறைப்பும், விறைப்புமாகவே இருக்கிறார்.

மதுரை சார்ந்த கதையில் நிவாஸ் கே பிரசன்னாவின் இசை ரசிக்க வைக்கிறது. ‘அழகரு வாராரு’ என டைட்டில் பாடலில் நிமிர்ந்து ரசிக்க வைக்கும் அவர், ‘மதுர பளபளக்குது’ பாடலில் வித்தியாசம் காட்டி துள்ள வைக்கிறார். பின்னணி இசையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சக்தி சரவணன் ஒளிப்பதிவு கதையோடு பயணித்திருக்கிறது. எடிட்டர் பிரவீன் கே.எல் சில காட்சிகளையும், சில காட்சிகளின் நீளத்தையும் நறுக்கியிருக்கலாம்.

என்னதான் சாதிய படம் இல்லை எனப் படக்குழுவினர் சொல்லிக்கொண்டே இருந்தாலும், கதையோட்டத்தில் ஆங்காங்கே குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் பெருமை நெடி வீசிக் கொண்டே இருக்கிறது. அடுத்தப் படத்திலாவது அதை இயக்குநர் முத்தையா தவிர்க்க வேண்டும். அக்கா, தம்பி பாசம் எல்லாம் காலம்காலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்ததுதான். அதை சுவாரஸ்யப்படுத்த திரைக்கதையில் மெனக்கெட்டிருக்கலாம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com