விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்திற்குப் பிறகு கார்த்தியின் நடிப்பில் வெளியாகியுள்ள ’சுல்தான்’ திரைப்படம் முதல்நாள் வசூலில் சாதனை படைத்துள்ளது என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு வெளியான ’மாஸ்டர்’ படத்தை தவிர மற்ற எந்த திரைப்படங்களும் வசூல் ரீதியில் வெற்றி அடையவில்லை. அந்தப் படங்கள் அனைத்தும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் கடும் நஷ்டத்தை கொடுத்தன. இந்த நிலையில் கார்த்தி நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் நேற்று சுல்தான் திரைப்படம் வெளியானது.
ஜனரஞ்சகமான முறையில் எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை தமிழகத்தில் 500-க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக எந்த திரைப்படமும் தங்களுக்கு லாபத்தை கொடுக்கவில்லை என்பதால் ’சுல்தான்’ திரைப்படத்தை விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் அதிகம் எதிர்பார்த்திருந்தனர். அதை ’சுல்தான்’ திரைப்படம் நிகழ்த்தியுள்ளது என வினியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக தமிழகத்தில் முதல் நாள் மட்டும் 6 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது என தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களில் முதல் நாள் வசூலில் ’மாஸ்டர்’ திரைப்படம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தை தற்போது ’சுல்தான்’ பிடித்திருக்கிறது. அதேபோல் குடும்ப ரசிகர்களை சுல்தான் கவர்ந்திருப்பதால் வார இறுதி நாட்கள் மட்டும் அல்லாமல் வரும் நாட்களிலும் பெரும் வசூல் நீடிக்கும் என்று வினியோகஸ்தர்கள் கூறுகின்றனர். இதனால் திரையரங்கு உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் மகிழ்ச்யில் உள்ளனர்.