தமிழ்நாட்டில் 1160 திரையரங்குகள் மட்டுமே உள்ள நிலையில், அவற்றின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு நடிகர் சங்கம் உதவ வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற புதிய நிர்வாகத்திற்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம், நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த பன்னீர்செல்வம், தமிழகத்தில் ஆயிரத்து 160 திரையரங்குகள் மட்டுமே உள்ளதாகவும், அவற்றின் எண்ணிக்கையை உயர்த்த ‘சிங்கிள் விண்டோ’ அனுமதி முறையை அரசு கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அதற்கான உதவியை நடிகர் சங்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். நடிகர்கள் சந்திக்கும் பிரச்னை, தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்னை, திரையரங்குகள் சந்திக்கும் பிரச்னைகளை கலைந்து திரைத்துறை வளர்ச்சிக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
விரைவில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், ஃபெஃப்சி உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகவும் திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஆனால் மக்களின் மனநிலையோ வேறுமாதிரியாக உள்ளது.
கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகள் உலகம் முழுவதும் மூடப்பட்டதால் ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சியைப் பெற்றன. உலகளாவிய திரைப்படங்கள், வெப் சீரிஸ் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. புதிய ஓடிடி தளங்களின் வருகையும் அதிகமானது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. ஊரடங்கினால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலைக்கு ஆளான மக்கள், திரையரங்குகளுக்கு மாற்றாக ஓடிடி தளங்களைத் தேடிச் சென்றனர். ஓடிடி தளங்களும் அவ்வப்போது போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அள்ளித் தெளித்தன.
கொரோனா காலகட்டத்துக்கு முன்பு இருந்ததைவிட தற்போது 60 சதவிகிதம் ஓடிடி பயன்பாடு அதிகரித்து உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் 4.6 கோடி சந்தாதாரர்களை பெற்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓ டி டி தளம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் 1.9 கோடி சந்தாதாரர்களை பெற்று அமேசான் ப்ரைம் வீடியோ இரண்டாம் இடத்தில் உள்ளது. உலகிலேயே அதிக சந்தாதாரர்களை பெற்றிருப்பதில் முதலிடத்தில் இருக்கும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்கு இந்தியாவில் 50 லட்சம் சந்தாதாரர்கள் இருக்கின்றனர்.
பெரும் வெற்றி பெற்ற படங்களில் 40% படங்கள் ott தளங்களிலேயே காண கிடைக்கின்றன. மாநில மொழி சார்ந்த திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பிற மொழி திரைப்படங்கள், வெப்சீரிஸ்கள், ரியாலிட்டி ஷோக்கள், ஐபிஎல் என அனைத்து வகையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஓடிடி தளங்களில் கிடைப்பதால் பொது முடக்க காலகட்டத்தில் பெருவாரியான மக்கள் ஓட்டிட்டு தளங்களில் சந்தாதாரர்களாக இணைந்தனர். அதனால் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜீ ஒரிஜினல் ஆகிய ஓடிடி தளங்களின் லாபமும் உயர்ந்தது.
இன்றைய தேதியில் குடும்பத்துடன் திரையரங்கத்துக்குச் சென்று வந்தால் டிக்கெட், பார்க்கிங், பாப்கார்ன் என்று 2000 ரூபாய் வரை செலவு ஆகிறது. இதுவே ஓடிடி தளங்களுக்கு மாதம் 500 ரூபாய் செலுத்தினால் எண்ணற்ற படங்கள், தொடர்களை வீட்டிலேயே வசதியான சூழலில் பாதுகாப்பாக கண்டுகளிக்க முடியும் என மக்கள் நினைக்கின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் திரையரங்குகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை காண்போம். நியூஸ் 360 வீடியோவில் விரிவாகக் காணலாம்.