சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில், யார் தவறு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பிரபல சீரியல் நடிகை சித்ரா, சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த விசாரணையில், சித்ரா தற்கொலை செய்துகொள்ள அவரின் கணவர் மற்றும் தாய் கொடுத்த மனஅழுத்தமே காரணம் என காவல்துறை தெரிவித்துள்ளது. கணவர் ஹேம்நாத் மதுபோதையில் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்று சித்ராவுடன் பிரச்னை செய்தது அம்பலமாகியுள்ளது. அதனால், ஹேம்நாத்தை விட்டு பிரிந்து வருமாறு தாய் விஜயா சித்ராவிடம் தெரிவித்தாக கூறப்படுகிறது.
இருவரால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். சித்ராவின் செல்ஃபோனில் இருந்த SMS, புகைப்படங்கள், ஆடியோ போன்ற ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், அதனை மீட்கும் முயற்சியில் சைபர் க்ரைம் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கணவர் ஹேம்நாத் மற்றும் நட்சத்திர விடுதி ஊழியர்களிடம் 3ஆவது நாளாக விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், மேலும் பல தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
இதனிடையே, சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில், யார் தவறு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் சில முக்கியப் பிரமுகர்களுக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.