தமிழ் திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக இன்றுவரை இருந்துவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தன்னுடைய 170வது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ரூ.160 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமன்றி பல்வேறு வெளிநாடுகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.
பான் இந்தியா அளவில் மிகப்பெரிய வெற்றிபடமாக ரஜினிகாந்திற்கு வேட்டையன் திரைப்படம் அமையும் என கூறப்படும் நிலையில், படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் திரையில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் வேட்டையன் படத்தின் முன்னோட்டமாக டீசர் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
வேட்டையன் திரைப்படம் விரைவில் திரையில் வெளியாகவுள்ள நிலையில், படம் சார்ந்த அப்டேட்களை படக்குழு வாரிவழங்கி வருகிறது. சமீபத்தில் வெளியான மனசிலாயோ பாடல் ரீல்ஸ் மெட்டீரியலாக மாறி ரசிகர்களை கவர்ந்துவருகிறது. அதனை தொடர்ந்து Hunter Vantaar என்ற பாடலையும் படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் பிரிவியூ வீடியோவை வெளியிட்டிருக்கும் படக்குழு, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. ’குறி வச்சா இறை விழனும்’ என முன்னர் வெளியான டீசர் வீடியோவில் கூறப்பட்ட வசனத்திற்கு ஏற்ப, என்கவுன்ட்டர் செய்யும் போலீஸ் ஆஃபிசர் சார்ந்த கதைக்கருவை படம் வெளிப்படுத்துகிறது.
என்கவுன்ட்டர்களுக்காக அறியப்படும் போலீஸ் ஆஃபிசர்களின் புகைப்படங்களை பட்டியலிட்டு, ”என்கவுன்ட்டர் என்ற பெயரில் கொலை செய்வது தான் ஹீரோயிசமா?” என்ற கேள்வியை தேசிய போலீஸ் அகாடமியில் அமிதாப் பச்சன் வெளிப்படுத்துகிறார்.
அதற்கு நேர் எதிராக “என்கவுன்ட்டர் செய்றது குற்றம் பன்றவங்களுக்கு கொடுக்குற தண்டனை மட்டுமில்ல, இனிமே யாரும் அதுபோலான குற்றத்தை செய்யக்கூடாதுன்றதுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை” என்னும் வசனத்தை ரஜினிகாந்த் வெளிப்படுத்துகிறார். இதற்கிடையில் வீடியோவில் ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் அனைவரும் வந்து செல்கின்றனர்.
வீடியோவின் இறுதியில் அமிதாப் பச்சனும், ரஜினிகாந்த்தும் நேருக்கு நேர் எதிர்கொண்டு பார்க்கும் காட்சி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு சூப்பர் ஸ்டார்கள் ஒரே ஃபிரேமில் இருப்பதும், அவர்களின் நேருக்கு நேரான பார்வையும் பார்ப்பதற்கு அவ்வளவு அருமையாக இருக்கிறது. உண்மையில் பெரிய திரையில் இந்த இரண்டு பிக் ஸ்டார்களையும் பார்ப்பதற்கு தீயாக இருக்கப்போகிறது.
திரைப்படத்தை பொறுத்தவரையில் ஜெய் பீம் படத்தில் போலி வழக்குகள் பதியப்படுவது சார்ந்து பெரிய கருத்தை பதிவுசெய்த இயக்குநர் த.செ.ஞானவேல், வேட்டையன் திரைப்படத்தில் போலி என்கவுன்ட்டர்கள் குறித்து பேசப்போகிறாரா அல்லது வேறு ஏதேனும் மையக்கருவை எடுத்திருக்கிறாரா என்பதை திரையில்தான் பார்க்க வேண்டும். படமானது அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வருகிறது.