பொன்னியின் செல்வன் நாவல் தற்போது படமாக உருவாகி வரும் வேளையில், அப்படத்தின் வசனகர்த்தாவும் பிரபல எழுத்தாளருமான ஜெயமோகன் சோழர் அரண்மனைகள் குறித்து தெரிவித்த ஒரு கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
“சோழ அரண்மனைகள் குறித்து மிகைப்படுத்திதான் கூற வேண்டும். ஏனென்றால் அவர்களது அரண்மனைகள் எல்லாம் மரத்தாலானவையாக இருக்க வேண்டும். அவர்களது அரண்மனை குறித்து நம்மிடம் மாதிரி வடிவங்கள் இல்லை. கங்கை கொண்ட சோழபுரத்தில் மாளிகை மேடு என்னும் இடத்தில் ராஜேந்திர சோழனின் அரண்மனையின் மண்ணாலான அடித்தளம் மட்டுமே நமக்கு காணக் கிடைக்கிறது. அது பெரிய அஸ்திவாரம் போல இல்லை. எனவே அவர்களது (சோழர்கள்) அரண்மனைகள் இன்று நாம் வாழும் வீடுகள் அளவுக்குத்தான் இருந்திருக்கும். அதை நாம் அப்படியே படமாக்க முடியாது. அதை கற்பனையில் பிரமாண்டமாக ஆக்கித்தான் எடுக்க முடியும்” என்று தெரிவித்து இருந்தார் ஜெயமோகன்.
ஜெயமோகனின் இந்த கூற்று அடிப்படை புரிதலின்றி இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனங்களை முன்வைக்கத் துவங்கியுள்ளனர். அஸ்திவாரத்தில் மண் குழைத்து கட்டடத்தை எழுப்பினால் அது பிரமாண்ட கட்டடமாக வராது என்று கூறிய ஜெயமோகனுக்கு சில தரவுகளுடன் விளக்கங்களை அளித்துள்ளனர்.
அதில், “கங்கை கொண்ட சோழ புரத்தில் சுவர்கள் சுட்ட செங்கற்களால் ஆனவை. ஒவ்வொரு சுவரும் 1.10 மீட்டர் அகலம் கொண்டவை. இந்த அளவுடைய இரு சுவர்களுக்கு இடையே 0.55 மீ அளவுடைய இடைவெளி இருக்கும். இந்த இடைவெளி மணல் கொண்டு நிரப்பப்பட்டு இருக்கிறது. இந்த ஏற்பாடு தட்பவெட்ப மாறுதலை எதிர்கொள்வதற்காக செய்யப்பட்டுள்ளது.
நமக்கு கிடைக்கப்பெற்ற சுவர்களின் தரம் வடிவமைப்பு அடிப்படையில் 6 கி/ச.செ.மீ தாங்குதிறனைக் கொண்டு கணக்கிட்டால், அந்த அடித்தளம் கிட்டத்தட்ட 120 டன்/ச.மீ தாங்குதிறனைக் கொண்டது. இதுபோல பக்கவாட்டிலும் இரு சுவர்கள் அமையப்பெற்றால் அதன் தாங்கு திறன் இரட்டிப்பு ஆகும். பல மாடிகளைக் கொண்ட குடில்களில் மொத்தப் பளுவும் கிடைமட்டத்திற்கு கடத்தப்படும். அதற்கு கங்கை கொண்ட சோழபுரமும் ஒரு சிறந்த உதாரணம் ஆகும். அப்படி கட்டப்பட்ட பிரமாண்ட மாளிகையை நமது வீடு என்று சுருக்குவது அடிப்படை அற்ற கருத்து” என்று குறிப்பிட்டுள்ளார்.