நம்மூர் தெக்கத்தி அன்புக் கதைகளைப் போலவே ஆயிரமாயிரம் அழகான பாசக் கதைகள் தென்னாப்பிரிக்க நிலத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. அப்படியொரு அழகான அன்புக் கதைதான் ‘தி லெட்டர் ரீடர்’ எனும் தென் ஆப்பிரிக்கத் திரைப்படம். தென்னாப்பிரிக்காவின் ஸுலூ மொழியில் உருவாக்கப்பட்டிருக்கிறது இத்திரைப்படம்.
12 வயது சிறுவன் ஸியாபோங்கா தென்னாப்ப்ரிக்காவின் கோல்டன் நகரவாசி. சிறுவனின் தாய், தந்தை இடையிலான உறவுச் சிக்கலால் சில காலம் அச்சிறுவன் தனது தாய்வழிப் பாட்டியின் கிராமத்தில் தங்க வேண்டி இருக்கிறது. குடிசைக்குள் இருந்த சிறுவன் தனது தாத்தாவின் கடிதமொன்றை வாசிக்கிறான். அதனை மறைந்து இருந்து பார்த்த படிப்பு வாசனையற்ற பாட்டி பெருமை கொள்கிறாள். “என் பேரனுக்கு வாசிக்க தெரியும்” என தன் பலசரக்கு கடைக்கு வருவோரிடம் பெருமையாகச் சொல்கிறாள் அவள். இப்படியாக சிறுவன் ஸியாபோங்கா அவ்வூர் வாசிகளுக்கு நகரத்திலிருந்து வரும் கடிதங்களை வாசித்துக் காட்டத் துவங்குகிறான்.
நப்ஹோல், அவ்வூரில் வாழும் திருமணமான இளம்பெண். அவளது கணவன் மென்ஸி பிழைப்பிற்காக நகரம் சென்றிருக்கிறார். மென்ஸி அங்கிருந்து அனுப்பும் முதல் கடிதத்தை சிறுவன் மூலம் வாசிக்கக் கேட்டு நெகிழ்ந்து போகிறாள் நப்ஹோல். அக்கடிதம் முழுக்க காதலின் பனிச் சொற்கள். அவளுக்கு வந்திருப்பதாக சொல்லி தானே எழுதிய கடிதங்களை வாசித்துக் காட்டுகிறான். பிறகு ஒரு புள்ளியில் சிறுவனுக்கு அப்பெண் மீது காதல் பிறக்கிறது. உண்மையில் அதனை காதல் என்று சொல்லக் கூடாது அது பதின் வயதிற்கேயானதொரு ஈர்ப்பு என்றும், சொல்லலாம் ஏதும் எதிர்பாராத பேரன்பும் என்றும் சொல்லலாம். சிறுவன் ஸியாபோங்கா தானே ஒரு கடிதம் எழுதி அதனை அவளுடைய கணவன் மென்ஸி அனுப்பியதாகக் கூறி வாசித்துக் காட்டுகிறான். இப்படியாகத் தொடரும் இந்தக் கடித வாசிப்பில் சிறுவனின் செயல் அப்பெண்ணுக்கு தெரியவந்ததா, அப்பெண்ணின் கணவர் ஊர் திரும்பினாரா, சிறுவன் மீண்டும் தன் பெற்றோருடன் சென்றானா என்பதெல்லாம் மீதி திரைக்கதை.
மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு தப்பான கதை போல இருக்கலாம். இதனை தப்பான கதை என்று சொல்வதை விடவும் ரிஸ்க்கான கதை என்று சொல்லலாம். அந்த ரிஸ்க்கை தனது முதல் படத்திலேயே எடுத்திருக்கிறார் இயக்குநர் ஸிபுஸிஸோ க்ஹுஸாவ்யோ (sibusiso khuzwayo). தென்றல் அடையும் தென்னாப்பிரிக்க கிராமத்தை களமாகக் கொண்டு ஒரு கவிதை போல இயக்கியிருக்கிறார் ஸிபுஸிஸோ.
மொத்தமாகவே படத்தில் 4 - 5 பேர் தான் தலைகாட்டுகிறார்கள். சொல்லிக் கொள்ளும் படியாக படுவித்தியாசமான கதையும் இது இல்லை. ஆனாலும் இந்த சினிமா நம் மனதை பெந்தடால் போல மயக்கிவிடுகிறது. இதைத்தான் ஸ்கிரீன் ப்ரஸண்டேஷன் என்பார்கள். ஒரு சுமாரான கதையினைக் கூட பீல்குட் மூவியாக ஒரு நல்ல இயக்குநரால் தர முடியும். அந்த பீல்குட் சான்றிதழை இந்த சினிமாவிற்கு தாராளமாகத் தரலாம்.
ஒரு அழகான ஆப்பிரிக்க கிராமத்தை தன் ஒளிப்பதிவால் இன்னும் அழகான ஒன்றாக மாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் லான்ஸ் கீவர் (lance cewer). இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் அக்கிராமத்தின் பண்பாட்டுக் கட்டுமானத்தில் கீறல் விழாமல் அக்கிராமத்தை அப்படியே பாதுகாத்து நமக்கு காட்சிப்படுத்தி இருப்பதை உணர முடிகிறது.
தி லெட்டர் ரீடர் எனும் இப்படத்தில் அனைவரது நடிப்பும் இதம் என்றாலும் கருப்புப் பேரழகி நப்ஹோலின் முக பாவனைகள் மயக்கும் சித்திரமாக திரையில் நிறைகிறது. காதல் கணவன் தனக்கு அனுப்பிய கடிதத்தை சிறுவன் ஸியாபோங்கா வாசிக்கும் போது அதிகமான ஷாட்டுகள் நப்ஹோலின் பாவனைகளை பதிவு செய்யவே வைக்கப்பட்டிருக்கிறது. அது இன்னும் இன்னும் அவளை, அவளது வெட்கத்தை, முகபாவனைகளை, மென் புன்னகையை மலைத்தேன் இனிப்பு போல நம் மனதில் தடவுகிறது. இக்கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நோமோலாங்கா ஷபோனே (Nomalanga Shabane).
தென்னாப்பிரிக்காவின் குடியரசு முன்னாள் தலைவர் தபொ உம்பெக்கியின் சுயசரிதையானது ‘தி ட்ரீம் டிஃப்பர்ட்’ (The Dream Deferred ) என்ற பெயரில் புத்தகமாக வெளியானது. அதனை தொகுத்து எழுதியவர் தென்னாப்பிரிக்க எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளரான மார்க் கிவிஸர் (Mark Gevisser). அந்த புத்தகத்தின்படி குடியரசுத் தலைவரின் சிறுவயது நாள்கள் குறித்த தாக்கம் இந்த சினிமாவில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
2019ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அரை மணி நேரக் காவியம் தற்போது நெட்பிளிக்ஸில் கிடைக்கிறது. தென்னாப்பிரிக்காவின் கோல்டன் ஹார்ன் விருது (Golden Horn award) மற்றும் ஆப்பிரிக்க அகாடமி விருது என்று சொல்லப்படும் எஃப்ரி ஒஸாகோ விருது (Efere Ozako Award ) ஆகிய விருதுகள் இந்த சினிமாவிற்கு கிடைத்தன.
ஒரு நல்ல காட்சி அனுபவத்தையும், இதமான உணர்வனுபவத்தையும் பெற விரும்புகிறவர்களுக்கு இந்த சினிமா நிச்சயம் பிடிக்கும். இப்படத்தின் எண்டு கார்டில் ஓடும் ஆப்பிரிக்க இசை போல உங்கள் மனம் குஷியாகும்.
- சத்யா சுப்ரமணி