தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரும் தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணன் அருள் நடித்து தயாரித்திருக்கும் படம்தான் தி லெஜெண்ட். ஜேடி & ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், நடிகர்கள் விகேக், பிரபு, சுமன், நாசர், மயில்சாமி, யோகி பாபு, ஊர்வசி ரவுடேலா, யாஷிகா ஆனந்த் என எக்கச்சக்கமான நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படம் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி திரையரங்கில் வெளியானது.
உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாக இருக்கும் நாயகன், தன் மருத்துவ திறமை மூலம் சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடித்து, அதை இந்தியாவுக்கான உடைமையாக்க போராடுவார். அந்த நாயகனாக நடித்திருக்கிறார் சரவணன் அருள். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல இந்திய மொழிகளில் தியேட்ர்களில் வெளியான இப்படம், வெளியான போது கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது.
இருப்பினும் ஓடிடியில் எப்போது தி லெஜெண்ட் ரிலீசாகும் என்றும் எந்த ஓடிடியில் தி லெஜெண்ட் ரிலீசாகும் என்றும் சினிமா ரசிகர்களின் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். பொதுவாக புதுப்படங்கள், தியேட்டரில் ரிலீசாகி 30 நாட்களில் ஓடிடி தளங்களில் வெளியாவது வழக்கம். ஆனால் தி லெஜெண்ட் படம் வெளியாகி கிட்டத்தட்ட 6 மாதங்களாகியும் ஓடிடியில் வெளியிடப்படாமல் இருந்தது. அதனால் ரசிகர்கள் பலமாதங்களாகவே கேள்வி எழுப்பியவண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில்தான், கடந்த மார்ச் 3ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் தி லெஜெண்ட் படத்தை வெளியிட்டிருக்கிறார் தயாரிப்பாளரும் நடிகருமான லெஜெண்ட் சரவணன். அதுவும், இந்தப் படத்தை பார்க்க சப்ஸ்கிரிப்ஷனே தேவையில்லையென, பார்வையாளர்களுக்கு இலவசமாகவே படத்தை வெளியிட்டிருக்கிறார் லெஜெண்ட் சரவணன்.
ஹாட் ஸ்டாரில் வெளியான இரண்டே நாளில் தற்போது அந்த தளத்தில் அதிகம் முறை ஸ்ட்ரீம் செய்யப்பட்ட படமாக தி லெஜெண்ட் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுபோக, சமூக வலைதளங்களிலும் தி லெஜெண்ட் படத்தை பற்றிய நேர்மறையான கருத்துகளையே இணையவாசிகள் பதிவிட்டு வருகிறார்கள்.
பக்கா கமெர்சியல் மெட்டீரியல் கொண்ட படமாகவே தி லெஜெண்ட் இருப்பதாகவே சிலாகித்து பதிவிட்டிருக்கிறார்கள் சிலர். இந்த நிலையில், தனது படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால் லெஜெண்ட் சரவணன் ட்விட்டரில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
அதில், “மக்களின் அமோக ஆதரவில் லெஜெண்ட் படம் ஹாட் ஸ்டாரில் முதல் இடத்தில் இருக்கிறது” எனக் குறிப்பிட்டு வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவின் கமென்ட் செக்ஷனில், “திறமைக்கான வெற்றி” , “இந்த படத்தை தியேட்டரில் பார்க்க தவறிவிட்டோம்” , “கொண்டாடப்பட வேண்டிய படம்” என்றெல்லாம் நெட்டிசன்கள் தத்தம் கருத்துகளை குறிப்பிட்டிருக்கிறார்கள்.
முன்னதாக லெஜெண்ட் சரவணன் மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் தற்போது அவரது படத்துக்கு பெருகும் வரவேற்பு மூலமே அந்த விமர்சனங்களையெல்லாம் அவர் தகர்த்தெறிந்திருக்கிறார் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.