திரையும் தேர்தலும் 5: "பஞ்சம் வராட்டா, உயிரை வாங்குமா பரோட்டா!" - 50களில் திராவிட பிரசாரம்

திரையும் தேர்தலும் 5: "பஞ்சம் வராட்டா, உயிரை வாங்குமா பரோட்டா!" - 50களில் திராவிட பிரசாரம்
திரையும் தேர்தலும் 5: "பஞ்சம் வராட்டா, உயிரை வாங்குமா பரோட்டா!" - 50களில் திராவிட பிரசாரம்
Published on

எம்.ஜி.ஆருக்கு முன்பே சிவாஜி கணேசன் அரசியலில் நுழைந்தார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை. ஸ்ரீபால கான சபாவில் சிறுவயதிலேயே இணைந்து பல்வேறு வேடங்களில் நடித்து பலரையும் ஈர்த்திருந்தார் கணேசன். பின்னர் எம்.ஆர்.ராதாவின் நாடக கம்பெனியில் சிறிதுகாலம் இருந்தார். அந்த நாடகக் கம்பெனி கைமாறியதும் "நடிப்பும் வேண்டாம். நாடகத்தொழிலும் வேண்டாம்" என்று கூறிவிட்டு திருச்சியில் ஒரு நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் மீண்டும் நாடக அழைப்பு வர, பழையபடி நடிப்புக்குத் திரும்பினார். அப்போதுதான் சென்னையில் நாடகம் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

அண்ணாவின் "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்" நாடகத்தில் வீர சிவாஜியாக நடிக்கும் வாய்ப்பு கணேசனுக்கு கிட்டியது. நாடகத்தை கண்டு களித்த பெரியார், "இன்றுமுதல் கணேசன், சிவாஜி கணேசன் ஆகிவிட்டார்" என்று மனமுவந்து பாராட்ட, கணேசன் அன்றிலிருந்து சிவாஜி கணேசன் ஆனார். பின்னர் அடுத்த சில மாதங்களில் அந்த நாடகக் குழுவிலிருந்தும் வெளியேறிய சிவாஜி கணேசன், அரசியல் பிரவேசம் செய்யலாம் என விரும்பி காஞ்சிபுரத்துக்கு வந்து அண்ணாவோடு தங்கினார். பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டார். மேடைகளில் அண்ணா பேசும் முன்னர் சிவாஜி கணேசன் பேசினார்.

ஆனால், அரசியல் மேடையை விட நாடக மேடையே கணேசனுக்கு சிறந்தது என்று முடிவெடுத்த அண்ணா, சக்தி நாடக சபாவுக்கு ஒரு சிபாரிசு கடிதம் எழுதி சிவாஜியை அனுப்பிவைத்தார். அப்படி திருச்சியில் சிவாஜி கணேசன் நடித்துக் கொண்டிருந்தபொழுதுதான் இயக்குனர்கள் கிருஷ்ணன் - பஞ்சுவை பெருமாள் நாடகம் பார்க்க அழைத்துவந்தார். 'பராசக்தி' பட வாய்ப்பு தேடி வந்தது. அண்ணாவின் 'ஓர் இரவு', கலைஞரின் 'பராசக்தி' ஒருசேர வளரத் தொடங்கியது.

இன்னொருபுறம் எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்து, கருணாநிதி வசனம் எழுதிய 'ராஜகுமாரி' பெரும் வெற்றி பெற்றிருந்தது. எம்ஜிஆர் - மு.க ஜோடி மிகவும் ராசியான ஜோடியாக ரசிகர்களால் நம்பப்பட்டது. மு.கருணாநிதி திராவிடர் இயக்கத்தை சேர்ந்தவர் என்பதால் எம்ஜிஆரும் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்தானோ என்கிற ஐயம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஒரு ரசிகர் 1949-ஆம் ஆண்டு குண்டூசி இதழில் "எம்.ஜி.ராமச்சந்திரன் திராவிடர் கழகத்தை சேர்ந்தவரா?" என்றொரு கேள்வியை கேட்டிருந்தார். அதற்கு ஆசிரியர், "அப்படி எங்காவது அவரிடம் சொல்லிவைக்கப் போகிறீர்கள். அந்த தீவிர காங்கிரஸ்வாதி உம்முடன் சண்டைக்கு வந்துவிடப்போகிறார்" என்று பதில் சொல்லியிருந்தார். அதில் உண்மையும் இருந்தது.

1949-ல் எம்ஜிஆர் - கருணாநிதி ஜோடியின் இரண்டு படங்கள் வெளிவந்தன. முதலில் 'மருதநாட்டு இளவரசி'. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த ராஜா - ராணி கதை. வீரதீர பராக்கிரமம் கொண்ட இளைஞனாக எம்ஜிஆர் தோன்றினார். கருணாநிதி வசனங்களில் அனல் தெறித்தது. குறிப்பாக இறுதிக் காட்சியில் எம்ஜிஆர் கொலைக்களத்தில் நின்றுகொண்டு பேசும், "கடைசியாகவா? யாரிடத்தில் சொல்வது? என் உயிரை குடிக்க துடித்துக்கொண்டிருக்கும் சாவிடத்தில் சொல்வதா? என் கழுத்தை நெறிக்கக் காத்திருக்கும் இந்தக் கத்தியிடத்தில் சொல்வதா? அல்லது வழிந்தோடும் என் ரத்தத்தைக் கண்டு ரசிக்க வந்திருக்கும் உன்னிடத்தில் சொல்வதா? யாரிடத்தில் சொன்னாலும் சரி... யார் கேட்டாலும் சரி... என் இதயத் துடிப்புகள் கடைசி நேரத்திலாவது ஆவேசமாக துடித்து ஓயட்டும். என் கண்களிலே ஒருமுறை கனல் வீசி பின்பு அணைந்து போகட்டும். என் ரத்த ஓட்டம் சூடேறி பின்னர் சில்லிட்டு போகட்டும்..." - இந்த வசனங்கள் எல்லாம் பலத்த பாராட்டுகளையும் கைத்தட்டலையும் ஒருசேர பெற்றது.

அடுத்து வந்த 'மந்திரிகுமாரி' படத்திலோ அனல் வீசும் அரசியல் வசனங்களுக்கு சற்றும் குறைவில்லை. ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான 'குண்டலகேசி'யைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் மார்பிலே பூணூலுடன் நயவஞ்சகம் நிறைந்த ராஜகுரு காதாபாத்திரம் இருந்தது. திராவிடக் கட்சியின் பிராமண எதிர்ப்புக்கு நல்ல களமாக இந்த ராஜகுரு கதாபாத்திரத்தை கருணாநிதி உருவாக்கியிருந்தார். திராவிட கட்சிக்கும், பகுத்தறிவு கொள்கைகளுக்கும் மக்களின் இடையே இருந்த செல்வாக்கை திரையரங்கில் எழுந்த கைதட்டல் மூலம் அறிந்துகொள்ளலாம்.

1951-ல் வெளிவந்த 'மர்மயோகி' எம்ஜிஆரின் பிம்பத்தை இன்னும் உயர்த்தியது. "நான் குறிவைத்தால் தவறாது. தவறுமானால் நான் குறிவைக்கமாட்டேன்" போன்ற வசனங்கள் மக்களிடையே பெரும் பிரபலமாகியது. மக்கள் தலைவர் கரிகாலனாக எம்ஜிஆர் வீரதீர சாகசங்கள் செய்திருந்தார். படத்தில் ஆவிகள் உருவம் எல்லாம் இடம்பெற்றதால் தணிக்கைத் துறையால் 'ஏ' சான்றிதழ் அளிக்கப்பட்டது. ஆனால், ஆவிகளை திரையில் காட்டுவது பகுத்தறிவுக்கு எதிரானதாக இருக்கும் என்பதால், ஆவியாக நடமாடும் காட்சியை யோகா செய்வதோடு தொடர்புப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டது. திராவிட கட்சியை சேராத படைப்பாளிகளும் கூட மக்களின் மனதை அறிந்து இவ்வண்ணம் காட்சிகள் அமைத்தார்கள். உண்மையில் திராவிட கட்சிகளின் எழுச்சியை, அவர்களின் பிரசாரம் மீது மக்களுக்கு இருந்த அபிமானத்தை இதன்மூலம் புரிந்துகொள்ளலாம்.

அதைவிட ஆச்சரியம் இந்த 'மர்மயோகி' படத்தை எந்தவித அரசியல் பிரசாரமும் இல்லாத படமாகவே கே.ராம்நாத் இயக்கியிருந்தார். அண்ணாவின் 'வேலைக்காரி' படத்தை இயக்கிய ஏ.எஸ்.ஏ.சாமி, 'மர்மயோகி'யின் கதை, வசனத்தை எழுதி இருந்ததாலும், 'மந்திரிகுமாரி' பட நாயகன் எம்ஜிஆர் நாயகனாக நடித்திருந்ததாலும், இது திமுக ஆதரவு படமாகவே மக்களால் கருதப்பட்டது. இதே ஆண்டு "வாலிபப் பெரியார்" என அனைவராலும் அழைக்கப்பட்ட ஏ.வி.பி. ஆசைத்தம்பி வசனம் எழுதிய 'சர்வாதிகாரி' என்கிற திரைப்படம் வெளிவந்தது. எம்ஜிஆர் நடித்திருந்தார். மந்திரிகள் மீது கடுமையான தாக்குதல்களை கொண்ட வசனங்கள் படம் முழுதும் இருந்தது. தமிழ்நாட்டில் அப்போது காங்கிரஸ் மந்திரி சபை இருந்ததை நினைவு கொள்ளுங்கள்.

மு.கருணாநிதி வசனம் எழுதிய 'மணமகள்' திரைப்படம் பலவகைகளில் திராவிடப் பிரசாரம் செய்தது. குறிப்பாக இந்தப் படத்தில் உடுமலை நாராயண கவி எழுதிய கீழ்க்கண்ட பாடலை கவனியுங்கள்.

"சுதந்திரம் வந்ததுன்னு சொல்லாதீங்க
சொல்லிச்சொல்லி சும்மா வெறும் வாயை மெல்லாதீங்க...
குடிக்கத் தண்ணீரில்லாது பெருங்கூட்டம் தவிக்குது
சிறுகும்பல் மட்டும் ஆரஞ்சுப்பழ ஜூசு குடிக்குது
அடுக்குமாடி மீது சிலது படுத்துத் தூங்குது
பல ஆயிரக்கணக்கான மக்கள் பாயில்லாம ஏங்குது
சோத்துப் பஞ்சம் துணிப்பஞ்சம் சுத்தமாக நீங்கல
சுதந்திரம் சுகம் தரும் என்றால் யாரு நம்புவாங்க.." - காங்கிரஸ் வாங்கித் தந்த சுதந்திரம் என்று ஒருபக்கம் அவர்கள் பிரசாரம் செய்துகொண்டிருக்க, இன்னொருபக்கம் திரைப்படப் பாடல்கள் அந்த சுதந்திரத்தால் யாருக்கு லாபம் என்று ஒரு கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது. இதை காங்கிரசால் வேடிக்கை மட்டுமே பார்க்கமுடிந்தது.

'சிங்காரி' என்றொரு படம் அதே வருடத்தில் வெளியானது. அதில் வந்த ஒரு பாடல் வரியை கவனியுங்கள்.

"ஒரு ஜாண் வயிறு இல்லாட்டா
இந்த உலகினில் ஏது கலாட்டா
உணவுப்பஞ்சம் வராட்டா - நம்ம
உயிரை வாங்குமா பரோட்டா..." - பரோட்டா ஏன் இங்கு வந்தது என்று யோசிக்கிறீர்களா? அரிசிப் பற்றாக்குறை காரணமாகத் தமிழ்நாடு முழுதும் கோதுமைத் தானியமும், மைதா மாவும் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. முதன்முறையாக சப்பாத்தியையும், பரோட்டாவையுமே செய்து உண்ணவேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அதை கேலி செய்யும் விதமாகவே இந்தப் பாடல் எழுதப்பட்டது. இப்படி திராவிடக் கட்சிக்கு சொந்தமானவர்கள் ஒருபக்கம் வசனங்களால் காங்கிரசை திணறடித்துக் கொண்டிருக்க, இன்னொருபுறம் பொதுவான சமூகப் படங்களிலும் கூட இப்படியான பாடல்வரிகள் இடம்பெறச் செய்து காங்கிரஸார் வயிற்றில் புளியைக் கரைத்தனர்.

1952 தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான ஆண்டு. நாம் இருவர், வேலைக்காரி, வாழ்க்கை, நல்லதம்பி போன்ற படங்களின் வெற்றி படத்தயாரிப்பாளர்களை புராணப் படங்கள் எடுப்பதை கைவிட்டுவிட்டு, சமூகபபடங்கள் நிறைய எடுக்க ஆர்வத்தை தூண்டியது. உதாரணத்திற்கு லட்சுமிகாந்தன் கொலை வழக்கிற்கு பிறகு சிறையிலிருந்து வெளிவந்து தியாகராஜ பாகவதர் நடித்த புராணப்படமான அமரகவி படுதோல்வி அடைந்தது. மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடித்திருந்த படம் இது. ஆனாலும் படத்தை தோல்வியிலிருந்து காக்க முடியவில்லை. மாறாக, மிகச்சாதாரண நடிகர்கள் நடித்து வெளிவந்த சமூகப்படமான அம்மா என்றொரு படம் நல்ல வெற்றியைப்பெற்றது.

அதே 1952-ல் நடந்த தேர்தலில் திமுக தங்களது "திராவிடத் தனியரசு" கொள்கையை ஆதரிக்கும் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாகவும், நேரடியாக தேர்தலில் கலந்துகொள்ளாது என்றும் அறிவித்தது. கம்யூனிஸ்ட்களும், காங்கிரஸ் கட்சியல்லாத பிறரும் இதை ஏற்றுக்கொள்வர் என்று திமுகவினர் எதிர்நோக்கினர். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியினர் இதை நிராகரித்தனர். மாறாக சுயேச்சையாக நின்ற 45 பேர் ஏற்றுக்கொண்டனர். தேர்தல் முடிவில் காங்கிரஸ் அறுதிப்பெரும்பான்மை பெறவில்லை. எனவே சுயேட்சையாக போட்டியிட்டு ஜெயித்த பலரை வளைத்துப் பிடித்து, ராஜாஜி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. காலம் மாறினாலும் இந்தக் கோலம் எப்போதும் மாறாது.

இதில் இன்னும் இரண்டு வேடிக்கைகள் நிகழ்ந்தது. ஒன்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தேர்தலில் போட்டியிட்ட பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றனர். கம்யூனிஸ்ட் இரண்டாவது பெரிய கட்சியாக மாறி சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்த்தில் அமர்ந்தது. அடுத்து திராவிடக் கட்சியின் திராவிடத் தனியரசு நிபந்தனையை ஏற்று தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பல சுயேட்சைகள், இறுதியில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

இதையெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. காலம் கனிய காத்திருந்தனர், அதன் தலைவர்கள்.

(திரை இன்னும் விரியும்...)

- பால கணேசன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com