மார்ச் 12 ஆம் தேதிக்கும் ரஜினியின் திரைப்பட வாழ்க்கைக்கும் ஒரு தொடர்பு உள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சென்னை லீலா பேலஸ் விருந்தினர் மாளிகையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், “தற்போதைய காலகட்டத்தில் அரசியல் மாற்றம் கண்டிப்பாக தேவை. சிஷ்டம் சரியில்லை. அதை சரிசெய்ய படித்தவர்கள், இளைஞர்கள், நல்லவர்கள் முன்வர வேண்டும். அரசியல் சாக்கடை என்று விலகி செல்லக் கூடாது. அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்களை வைத்திருக்கிறேன். அதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்றார்.
மேலும் “அதை நான் பாராட்டுகிறேன். 1996 ல் இருந்து நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிதான் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னேன். அதற்கு முன்பு அரசியலுக்கு வருவீர்களாக என்று கேட்டால் ஆண்டவன் கையில் உள்ளது என்றுதான் சொன்னேன்” என விளக்கம் அளித்தார்.
கடந்த சில நாட்கள் முன்பு மாவட்டச் செயலாளர்களை சந்தித்த ரஜினி, ‘தனிபட்ட வகையில் ஒரு ஏமாற்றம்’ எனக் கூறியிருந்தார். அதனையொட்டி என்ன ஏமாற்றம் எனச் செய்தியாளர்கள் கேட்க முயன்ற போது அவர் ‘நேரம் வரும்போது சொல்கிறேன்’ என்றார். ஆக, அவர் ஏன் நேரம் வரும்போது எனக் கூறவேண்டும். அந்தளவுக்கு என்ன உண்மை அதில் ஒளிந்துள்ளது என பல விவாதங்கள் நடந்தன. அதனையொட்டியே இன்றையச் சந்திப்பு உடனடியாக ஏற்பாடானது. ராகவேந்திரா மண்டபத்தை தவிர்த்து அவர் லீலா பேலஸுக்குப் போனார். அப்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டது. ‘கட்சி அறிவிப்பு வரும்’ என்றார்கள் பலர். ‘கொடியை அறிவிப்பார்’ என்றார்கள் சிலர். ஆனால் அவர் பழைய சந்திப்புக்கு ஒரு விளக்கம் மட்டுமே கூறியுள்ளார்.
இந்நிலையில், அவர் ‘நேரம் வரும்போது சொல்லுகிறேன்’ என்ற நேரம்தான் மார்ச் 12. இந்தத் தேதியை அவர் ஏன் தேர்தெடுத்தார்? அதன் பின் உள்ள ரகசியம் என்ன? அதற்கான விடை கிடைத்துள்ளது. இந்தத் தேதிக்கும் ரஜினியின் ‘பாபா’ படத்திற்கும் ஒரு தொடர்பு உள்ளது. இந்தப் படத்தில் ’மார்ச் 12’ ஆம் தேதியை வைத்துதான் ஒரு கதை திருப்பம் ஏற்படும். சாதாரண மனிதனாக இருக்கும் ரஜினிக்கு ஒரு ஆன்மிக அமானுஷ்ய சக்தி திடீர் என்று ஏற்படும். தீய சக்திகளை எதிர்க்க அவர் முடிவெடுக்கும் போது ‘மார்ச் 12’ ஆம் தேதி ஒரு முக்கியமான நாளாக காட்டப்படும். அதையொட்டியே தன் நிஜ அரசியல் வாழ்வுக்கும் ரஜினி இந்தத் தேதியை குறித்துள்ளார் என சமூக வலைத்தளத்தில் கருத்திட்டு வருகிறார்கள் அவரது ரசிகர்கள். மேலும், ட்விட்டரில் இன்று காலை முதலே அவரது ரசிகர்கள் #RajinikanthPoliticalEntry என்ற ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
‘பாபா’ படத்தினை ரஜினி தனது சொந்த தயாரிப்பில் எடுத்திருந்தார். அதனை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். கவுண்டமணி முக்கியமான வேடத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார். ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிப் பெறவில்லை.