சர்கார் படக்குழுவினர் மிக்சி, கிரைண்டர் வடிவங்களில் கேக்கை வெட்டி ‘சர்கார்’ படத்தின் வெற்றி விழாவை கொண்டாடியுள்ளனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘சர்கார்’. கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி படம் தீபாவளியன்று வெளியானது. இதனையடுத்து படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் எதிர்ப்பும் போராட்டமும் நடத்தினர்.
அத்துடன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிமுகவினர் குற்றம்சாட்டினர். இந்த காரணத்தை முன்வைத்து, தியேட்டர் முன் வைக்கப்பட்டிருந்த விஜய் பேனர்கள் கிழிக்கப்பட்டன. இதனால் ஒரு பரபரப்பான சூழ்நிலையே உருவானது. தமிழக அமைச்சர்களும் சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழு நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். இல்லையென்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து யோசிப்போம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழு சம்மதம் தெரிவித்தது. அதன்படி ’சர்கார்’ திரைப்படத்தில் இருந்து மிக்ஸி, க்ரைண்டர், ஃபேன் ஆகியவற்றை தூக்கி நெருப்பில் எரியும் காட்சி, மற்றும் வரலட்சுமி கதாபாத்திரத்தின் பெயர் கோமளவல்லி என்பதை ஆடியோ கட் செய்யவும் படக்குழு ஒப்புதல் தெரிவித்தது. இதனைதொடர்ந்து ‘சர்கார்’ படம் மறு தணிக்கை செய்து வெளியிடப்பட்டது. தற்போது சர்கார் சர்ச்சை ஓய்ந்துள்ள நிலையில், சென்னையில் அந்தப் படக்குழுவினர் வெற்றி விழா கொண்டாடியுள்ளனர்.
வெற்றி விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இதில் மிக்சி, கிரைண்டர் வடிவிலான கேக்குகளை வெட்டி, சர்கார் படக்குழுவினர் வெற்றி விழா கொண்டாடியுள்ளனர். சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த இலவசப் பொருட்களை எரிக்கும் காட்சிக்கு அதிமுகவினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இம்மதிரியான வெற்றி விழாவை சர்கார் படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.
இந்நிலையில் மிக்சி, கிரைண்டர் வடிவங்களில் கேக்கை வெட்டி அவர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ள குரூப் செல்பியை ஏ.ஆர்.ரகுமான் அவரது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கேக் இருக்கும் படத்தில் மெழுகுவர்த்தி ஏற்றும் கை யாருடையது என கேட்டு ஏ.ஆர்.ரகுமான் இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘சர்கார்’ முதல் 3 நாட்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.