இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படமான 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு தமிழக சமூக அரசியல் களத்தில் பலத்த எதிர்க்குரல்கள் எழுந்துவருகின்றன. இந்த நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் நடிகை குஷ்பு மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
"பந்துவீச்சாளரின் கடிதத்தில் பள்ளிபருவத்து போர்ச்சூழல்கள் வருத்தமே... ஆனால் முரண்பாடுகள் ரணமாக இருக்குபோது எழுதி நூலாக தமிழில் வெளிவராத ஒரு பயோகிராபியை எப்படி சந்தேகிக்காமல் இருப்பார்கள்? சுயசரிதை உள்ளூரில் தமிழில் ஏன் வெளியிடவில்லை?" என்று முத்தையா முரளிதரனிடம் கேட்டுள்ளார்.
"மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின்மீது மக்களும் தலைவர்களும் கலைஞர்களும் வைத்திருக்கும் பாசம்.அவர்களது வேண்டுகோளில் தெரிகிறது. அனைவருக்கும் நன்றி. தன் கதாபாத்திரத்தை தேர்வு செய்யும் முழு உரிமை நடிகருக்கு உண்டு ஆனால் சில நேரங்களில் சில இடங்களில் அது சாத்தியப்படாமல் முரண்பாடுகள் உள்ள நாடு இது, இம்ரான்கானாக ஷாருக்கான் ஜீ நடிக்க முடியுமா? அவ்வளவுதான்" என்றும் இயக்குநர் சீனு ராமசாமி கருத்து வெளியிட்டுள்ளார்.
"ஆஸ்பத்திரி, அப்பளம், விமானம், ஐ பி எல் பயிற்சியாளர் பணி கருத்து பரப்புமா? இதற்கும் நடிப்பு சுதந்திரத்துக்கும் என்ன சம்பந்தம்? இது முரண்பாட்டை தீர்க்குமா? என் மரியாதைக்குரிய சகோதரி" என்று ராதிகாவிடம் கேட்கும் சீனு ராமசாமி, . "சகோதரி வணக்கம் முன்னாடி நீங்க மணியம்மையாராக நடிச்சீங்க. இப்ப நடிக்க முடியுமா? சகோதரி நடிப்பு சுதந்திரம் வேற சமூக பரப்பில் ஒரு நடிகருக்கு உண்டாகும் மாற்றம்" என்று குஷ்புவிடம் கேள்வி எழுப்புகிறார்.