விஜய்யின் படங்கள் சந்திக்கும் பிரச்னைகளும், வெளியீட்டில் எழும் சிக்கல்களும்! மொத்த லிஸ்ட்!

விஜய்யின் படங்கள் சந்திக்கும் பிரச்னைகளும், வெளியீட்டில் எழும் சிக்கல்களும்! மொத்த லிஸ்ட்!
விஜய்யின் படங்கள் சந்திக்கும் பிரச்னைகளும், வெளியீட்டில் எழும் சிக்கல்களும்! மொத்த லிஸ்ட்!
Published on

நடிகர் விஜய்யின் படங்கள் வெளியாகும்போதெல்லாம் சூறாவளிப் போன்று சர்ச்சைகள் சுழலாமல் இருந்தது இல்லை. அவரது படத்தின் படப்பிடிப்பு தளங்களில் ஆரம்பிக்கும் பிரச்சனை, பின்னர் படத்தின் தலைப்பிலும், பட வெளியீட்டிலும், ஆடியோ வெளியீட்டு விழாவிலும், வசனங்களிலும், அரசியல் ரீதியாகவும் என பல்வேறு சர்ச்சைகள் சுழன்று அடிக்கும். அவ்வாறு விஜய்யின் படங்கள் சந்தித்த தடைகள், சிக்கல்கள் குறித்து இங்குப் பார்க்கலாம்.

புதிய கீதை - 2003

இயக்குநர் ஜெகன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருந்த ‘புதிய கீதை’ திரைப்படம், கடந்த 2003-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்திற்கு கீதை என்றுதான் முதலில் பெயர் வைக்கப்பட்டது. ஆனால், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘கீதை’ என்று பெயர் வைக்கக் கூடாது என இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து படத்திற்கு ‘புதிய கீதை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு படம் வெளியானது.

காவலன் - 2011

மலையாளத்தில் உருவான ‘பாடிகார்டு’ படத்தின் அதிகாரப்பூர்வ தழுவலாக உருவாகி, கடந்த 2011-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘காவலன்’. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக பட வெளியீட்டை எதிர்த்து விநியோகஸ்தர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். மேலும், கோவை திரையரங்கு உரிமையாளர்கள் படத்தை வெளியிடமாட்டோம் என்று போர்க்கொடி தூக்கினர்.

ஏனெனில் அதற்கு முன்னதாக விஜய்யின் நடிப்பில் அவரது 50-வது படமாக வெளியான ‘சுறா’ திரைப்படம் மோசமான தோல்வியடைந்ததையடுத்து, தோல்விக்கு நஷ்டஈடு கேட்டு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ‘காவலன்’ படத்தை வெளியிட மாட்டோம் என்றார்கள். அதேவேளையில் படத்தை வெளியிடக் கோரி ரசிகர்கள் போராட்டம் நடத்தினர். கடைசியாக விஜய் நஷ்ட ஈடு கொடுத்ததைத் தொடர்ந்து ‘காவலன்’ திரைப்படம் திரையிடப்பட்டது.

துப்பாக்கி - 2012

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளி தினத்தை முன்னிட்டு கடந்த 2012-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘துப்பாக்கி’. இந்தப் படத்தின் தலைப்பை மாற்றக் கோரி ‘கள்ளத்துப்பாக்கி’ படக் குழுவினர் வழக்குத் தொடர்ந்தனர். பின்னர் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் அவர்கள் வழக்கை திரும்பப் பெற்றதால், இந்தப் படத்தின் மீதான தடை நீங்கியது. அதன்பிறகு இஸ்லாமியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, படத்திற்கு தடைக்கோரி பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தின. பின்னர் குறிப்பிட்ட சில காட்சிகள் நீக்கப்படுவதாகவும், சிலக் காட்சிகள் மியூட் செய்யப்படுவதாகவும் தெரிவித்தப்பின் போராட்டம் கைவிடப்பட்டது. அதன்பிறகே இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது.

தலைவா - 2013

ஏ.எல். விஜய் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தலைவா’. அரசியல் ரீதியாக விஜய் மக்கள் இயக்கம் செயல்பட ஆரம்பித்த நேரத்தில், ‘டைம் டூ லீட்’ என்கிற டேக் லைனுடன் ‘தலைவா’ பட வெளியீட்டிற்கான அறிவிப்பு வந்தது பரபரப்பை கூட்டியது. இது அரசியல் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியநிலையில், திரையரங்குகளில் வெடிகுண்டு வைக்கப்படும் என்று அரசுக்கு மர்ம கடிதம் வந்ததாகக் கூறி, பாதுகாப்பு கருதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு தடை விதித்தது.

ஜெயலலிதாவை சந்திக்க படக்குழுவினர் அனுமதி கேட்டிருந்த நிலையில், அதற்கான வாய்ப்பு கொடுக்கப்படவே இல்லை. இதனால், மற்ற மாநிலங்களில் குறிப்பிட்டப்படி படம் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் வெளியாகவிருந்த தேதியிலிருந்து 11 நாட்கள் கழித்துதான் இந்தப்படம் வெளியானது. அதுவும் ‘டைம் டூ லீட்’ என்கிற வாசகம் நீக்கப்பட்டு படம் வெளியிடப்பட்டது. மேலும், பட வெளியீட்டு பிரச்சனையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலைமை வரை போனது குறிப்பிடத்தக்கது.

கத்தி - 2014

மீண்டும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கத்தி’. அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு நெருக்கமான லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தாகக் கூறி, ‘கத்தி’ படத்தை வெளியிடக்கூடாது என சில தமிழக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் போராட்டங்கள் வெடித்தன. பின்னர் ஒருவழியாக பிரச்சனை தீர்க்கப்பட்டு படம் வெளியானது. மேலும் கோபி நயினாரின் கதையை திருடி ஏ.ஆர். முருகதாஸ் எடுத்ததாக சர்ச்சையை ஏற்படுத்தியது.

புலி - 2015

சிம்புதேவன் இயக்கத்தில், விஜய், ஸ்ரீதேவி ஆகியோர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘புலி’. இந்தப் படம் வெளியான நேரத்தில், விஜய் உட்பட அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் முதல்நாள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதையடுத்து படத்தின் அதிகாலை காட்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு பகல் காட்சி திரையிடப்பட்டது.

தெறி - 2016

அட்லீ இயக்கத்தில், விஜய், சமந்தா நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தெறி’. தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இந்தப் படத்திற்கு அதிக விலை விதிக்கப்பட்டதாலும், மினிமம் கேரண்டி முறையில் படத்தை வாங்கக் கூறி வற்புறுத்தப்பட்டதாலும், விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் சென்னையிலேயே முக்கிய திரையரங்குகளில் மட்டுமே இந்தப்படம் வெளியாகியிருந்தது. செங்கல்பட்டு பகுதி உட்பட்ட பல திரையரங்குகளில் இந்தப் படம் வெளியிடப்படவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தப்போதிலும், முக்கியமான பல இடங்களில் படம் வெளியாகாவிட்டாலும் பரவாயில்லை என படக்குழு படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிட்டது.

மெர்சல் - 2017

மீண்டும் அட்லீ இயக்கத்தில், விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மெர்சல்’. இந்தப் படத்தில் விஜய் பேசிய வசனங்களான ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா ஆகியவைக்கு பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்திரராஜன் உட்பட அக்கட்சியினர் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் பாஜகவின் ஹெச். ராஜா ‘ஜோசப் விஜய்’ எனத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டதாக மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தில் பணியாற்றிய மெஜிசியன் ரமணன் ஷர்மா சம்பளப் பாக்கி குறித்து சர்ச்சையை கிளப்பினார். கர்நாடக மாநிலம் மல்லேஸ்வரம் பகுதியில் இருந்த திரையரங்கு ஒன்றில் விஜய்யின் மிகப்பெரிய கட் அவுட் வைக்கப்பட்டதை அடுத்து, கன்னட அமைப்பினர் சிலர் திரையரங்கு மீது கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டு, பின்னர் ‘மெர்சல்’ படத்தை கர்நாடகாவில் திரையிடக்கூடாது என எதிர்த்தனர். மேலும், படம் வெளியாவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்னர் வரை சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படாமல் இருந்தது.

சர்கார் - 2018

மீண்டும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சர்கார்’. இந்தப் படத்தின் கதை தன்னுடைய கதையின் தழுவல் எனக் கூறி வருண் ராஜேந்திரன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து படத்தில் வருண் ராஜேந்திரன் பெயருக்கு கிரெடிட்ஸ் கொடுப்பதாக ஏ.ஆர்.முருகதாஸ் உறுதியளித்ததை அடுத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அத்துடன் அரசு கொடுத்த இலவசங்கள் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் பயன்படுத்தப்பட்டதாக எதிர்ப்பு கிளம்பியது. அதிமுகவினரே களத்தில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் நடத்திய பெருமையும் இந்தப் படத்திற்கு உண்டு. மேலும் இந்தப் பட வெளியீட்டு விழாவில் அரசியல் ரீதியாக பல விஷயங்களை விஜய் பேசியது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

பிகில் - 2019

மீண்டும் அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பிகில்’. இந்தப் படத்தின் போஸ்டரில் இறைச்சி வெட்டும் மரக்கட்டையின் மீது விஜய் கால் வைத்திருப்பது போன்ற காட்சி வெளியிடப்பட்டது. அந்தக் காட்சியை கண்டித்து வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். மேலும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசுகையில், ''எவனை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ, அவனை அங்கே கரெக்டா உட்கார வைத்தீர்கள் எனில், இந்த கோல்டு மெடல் தானாக வந்து சேரும்'' என மறைமுகமாக தெரிவித்ததற்கு பாஜக மற்றும் அதிமுகவினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மாஸ்டர் - 2021

விஜய், விஜய் சேதுபதி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்திருந்த திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்துவந்த நிலையில், படப்பிடிப்பு நிறைவடைய சில நாட்கள் இருந்தபோது, விஜய்யின் வீடுகளில் வருமானவரி சோதனை நடந்தது மட்டுமில்லாமல், படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியதுடன் கூடவே, அவரை சென்னைவரை அவர்களது காரிலேயே அழைத்துச் சென்ற சம்பவம் சர்ச்சையை கிளப்பியது.

இதன்பிறகு, படப்பிடிப்பு தளத்திற்கு திரும்பிய விஜய் வாகனத்தின் மீது ஏறி ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அத்துடன் அந்தப் புகைப்படங்களும் படு வைரலாகின. மேலும் கொரோனா காரணமாக படங்கள் ஏதும் வெளியிடப்படாமல் இருந்தநிலையில், பொங்கலை முன்னிட்டு ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. ஆனால் 50 சதவிகித இருக்கைகளுக்கே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், விஜய் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி கேட்டிருந்தார். அதன்படி அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் அறிவுறுத்தல் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பால் 50 சதவிகித இருக்கைக்கு மட்டுமே சில நாட்களில் ‘மாஸ்டர்’ படத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் பூந்தமல்லி அருகே பள்ளி ஒன்றில் நடந்த படப்பிடிப்பின்போது, படக்குழுவைச் சேர்ந்த சிலர் அனுமதியின்றி புகைப்பிடித்ததாகவும், இசை வெளியீட்டு உரிமம் பெற்ற நிறுவனத்தின் முன் அனுமதியின்றி ஆடியோ வெளியீட்டு விழாவில் பாடல்கள் வெளியிடப்பட்டதாகவும், நெய்வேலி நிலக்கரி சுரங்க நிர்வாகம் படப்பிடிப்பு நடத்த அனுமதியளித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியது, கே. ரங்கதாஸ் என்பவர் தனது கதை திருடப்பட்டதாக புகார் தெரிவித்தது என பல்வேறு சர்ச்சைகள் இந்தப் படத்தை சுத்தின.

பீஸ்ட் - 2022

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ‘பீஸ்ட்’ திரைப்படம், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14-ம் தேதி முதலில் வெளியாக இருந்தது. ஆனால், அந்த நேரத்தில் பான் இந்தியா படமாக உருவாகியிருந்த கன்னட நடிகர் யஷ்ஷின் ‘கே.ஜி.எஃப். 2’ திரைப்படமும் தமிழ்நாடு உள்பட மற்ற மாநிலங்களிலும் அதே தேதியில் வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படம் ஒருநாள் முன்னதாக ஏப்ரல் 13-ம் தேதி வெளியானது.

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்டிருந்தநிலையில், எதிர்பார்த்த அளவு படம் வரவேற்பு பெறவில்லை. இதை அடுத்து குறிப்பிட்ட சில ஏரியாக்களில் யஷ்ஷின் ‘கே.ஜி.எஃப். 2’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமம் பெற்றிருந்த ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம், அங்கு ‘பீஸ்ட்’ திரையரங்கு காட்சிகளை குறைத்துவிட்டு, அதிக திரையரங்கு காட்சிகள் ‘கே.ஜி.எஃப். 2’ படத்திற்கு ஒதுக்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மேலும், படத்தில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தீவிரவாதிகளாக காட்டப்பட்டுள்ளதாகவும், வன்முறை சம்பவங்கள் அதிகமாக இருப்பதாகவும் கூறி, கத்தார், குவைத் நாடுகளில் படத்தின் வெளியீடு தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் தமிழ்நாடு முஸ்லிம் லீக் என்ற சிறுபான்மை கட்சியும் தமிழ்நாட்டில் ‘பீஸ்ட்’ படத்தை தடைசெய்யக் கோரிக்கை விடுத்திருந்தது.

வாரிசு - 2023

விஜய் நடிப்பில், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. பைலிங்குவல் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ‘வரசுடு’ என்றப் பெயரில் வெளியாகவுள்ள இந்தப் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘பேட்ட’ படம், தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக இருந்தநிலையில், அப்போது ஆந்திராவில் தெலுங்கு நேரடி திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ உள்ளிட்டோர் கூறியநிலையில், அதனையே தற்போது சுட்டிக்காட்டி, தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர்கள் சங்கம் விஜய் படத்துக்கு முன்னுரிமை அளிப்பதை தவிர்க்குமாறு ஆந்திரா, தெலங்கானா திரையரங்குகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால் இந்தப் படம் அங்கு குறிப்பிட்டப்படி வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது.

அதேநேரத்தில் தமிழகத்திலும் அதிக திரையரங்குகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் விஜய்யின் ‘வாரிசு’ படத்துடன், அஜித்தின் ‘துணிவு’ படமும் வெளியாகவுள்ளது. தமிழகத்தில் துணிவு படத்தின் தியேட்டர் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கியிருப்பதால், அந்தப் படத்துக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த இரண்டு பெரிய பிரச்சனைகளையும் விஜய் இப்போது எதிர்கொள்ள வேண்டியநிலையில், நேற்று திடீரென பனையூரில் ரசிகர்களை சந்தித்துள்ளார் விஜய். விரைவில் இதற்கு சுமூகத் தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com