முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்துவரும் நடிகை கங்கனா ரனாவத் ’தலைவி’ படத்தின் சில புதிய புகைப்படங்களை பகிர்ந்து நினைவுகூர்ந்துள்ளார்
தமிழகத்தின் ஆளுமையான முதல்வர்களில் ஒருவராக சொல்லப்படும் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மறைந்தார். மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்ற தலைவர்கள் என்றாலே அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எடுக்க இயக்குநர்கள் படையெடுப்பார்கள்.
அப்படித்தான், இயக்குநர் கெளதம் மேனனும், ஏ.எல் விஜய்யும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வராலாற்றுப் படத்தை இயக்க ஆர்வம் காட்டினார்கள். இயக்குநர் கெளதம் மேனன் ரம்யா கிருஷ்ணனை வைத்து ‘குயின்’ என்ற வெப் சீரிஸை இயக்கினார். ஏ.எல் விஜய் கங்கனா ரனாவத்தை வைத்து ‘தலைவி’ படத்தை இயக்கி வருகிறார்.
குயின் வெப் சீரிஸுக்கு கிடைத்த வரவேற்பு போலவே, ’தலைவி’க்கும் கிடைக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பையும் கலவையான விமர்சனங்களையும் பெற்றநிலையில், இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் தலைவி குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது.
இந்நிலையில், தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா ரனாவத் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில்,
“ஜெயலலிதா அம்மாவின் நினைவு நாளில் எங்கள் புரட்சிக்கரத் தலைவி படத்தின் சில புகைப்படங்களை பகிர்ந்துகொள்றோம். எங்களது படக்குழுவுக்கு நன்றி. குறிப்பாக எங்கள் அணியின் தலைவர் விஜய்க்கும் நன்றி. ஓரிரு வாரங்களில் படத்தை முடிக்க அவர் சிறப்பாக பணியாற்றி வருகிறார்” என்று பெருமையுடன் பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் அப்படியே ஜெயலலிதாவின் ஆரம்பகால அரசியல் வாழ்க்கையை நம் கண்முன் கொண்டு வருகின்றன என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.