தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்.ஜி. ஆர். கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, மதுபாலா, நாசர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்தப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி தற்போது தலைவி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
அரவிந்த் சாமியின் கம்பீர குரலில் ஜெயா என ஒலி எழுப்பி தொடங்கும் ட்ரெய்லர், அடுத்தடுத்த காட்சிகளின் பிராமாண்ட தன்மையாலும், கங்கனாவின் கண்ணசைவினாலும் நம்மை மிரள வைக்கிறது.
“ஒரு சினிமா காரிய வைச்சு எங்களுக்கு அரசியல் சொல்லி கொடுக்கிறதுங்கிறது ” “இது ஆம்பளங்க உலகம் இத ஆம்பளங்கதான் ஆளனும் என.. பின்னணியில் ஆண்களின் அதிகாரவர்க்க வசனங்கள் ஒலிக்க, பேரழகுக்கு சொந்தக்காரியான ஜெயா தனது வாழ்கையில் எதிர்கொண்ட நெருப்பின் அனலை அடுத்த காட்சிகளில் காண்பித்து நகர்கிறது ட்ரெய்லர்.
அடுத்தது ப்ளாஷ் பேக்... ஜெயாவின் சினிமா வாழ்கை... எம்.ஜி. ஆர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அரவிந்தசாமிக்கும் கங்கனாவுக்கும் இடையே நடக்கும் உரசல்கள் என நகரும் காட்சிகள் ஜெயாவை எம்.ஜி.ஆரின் அடுத்த அரசியல் வாரிசாக நிலைநிறுத்துகிறது.
கட்சி கொடி சேலையை கட்டிக்கொண்டு புன்முறுவலோடு நடை கட்டி வரும் ஜெயாவை, பிணந்தின்னி கழுகுகளாக கண்காணிக்கும் ஆண் கழுகுகள் அவளை சிதைக்கும் முனைப்போடு நரம்பில்லா நாக்கின் வழியாக வார்த்தைகளை வீசுவது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் ஜெயாவோ அதை அநாசியமாக எதிர்கொள்கிறாள்.
நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் நிமிர்ந்து நின்று பேசும் ஜெயாவின் தொனியும், வட மாநில அரசியல் தலைவருக்கு ஆங்கிலத்தில் பதிலடி கொடுப்பதும் ட்ரெய்லரில் நச் காட்சிகள்.
சட்டசபையில் ஜெயாவின் சேலையை இழுத்து அவமானப்படுத்துவது, எம்.ஜி.ஆர் சடலத்தை பார்க்க விடாமல் தடுப்பது என அரசியல் கள அனலை முழுவதுமாக உள் வாங்கும் ஜெயா, பெண்ணுக்கான பெரும் வலிமை கொண்டு எதிர்க்கும் காட்சிகள் நமக்கு ஜெயலலிதாவின் வாழ்கையை கண்முன்னே நிறுத்துகின்றன.
என்னை அம்மாவாக பார்த்தீங்கனா என் இதயத்தில் இடமிருக்கும், பொம்ளையா பார்த்தீங்கனா.... என ஜெயலலிதாவுக்கு உண்டான அதிகார குரலில் முடிகிறது ட்ரெய்லர். விஷால் விட்டலின் ஒளிப்பதிவும், ஜி.வி பிரகாஷ்குமாரின் இசையும் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கலாம். ஏ.எல்.விஜயும், கங்கானாவும் இணைந்து காட்சித்திரையில் கடத்தியிருக்கும் மேஜிக்கை காண சிறிது நாட்கள் காத்திருக்கலாம்.