முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்று படத்தில் எம். ஜி.ஆர் ஆக நடித்து வரும் நடிகர் அரவிந்த் சுவாமி, தலைவிப் படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு சம்பந்தமான ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். திரைப்பட நடிகையாக தனது வாழ்கையைத் தொடங்கிய ஜெயலலிதா பின்னாளில் தமிழகத்தின் மிகவும் கவனிக்கத்தக்க ஆளுமையாக உருவெடுத்தார். சறுக்கல்களும், சாதனைகளும் நிரம்பிய அவரது வாழ்கை வரலாற்றை திரைப்படமாக மாற்றும் முயற்சியில் இறங்கிய கெளதம் வாசுதேவ் மேனன், இயக்குநர் பிரசாந்த் முருகேசனுடன் இணைந்து ‘குயின்’என்ற பெயரில் ரம்யா கிருஷ்ணனை வைத்து அவரது வாழ்கையை வெப் சீரிஸாக எடுத்தார்.
அந்த வரிசையில், இயக்குநர் ஏ.எல்.விஜயும் கங்கனா ரனாவத்தை வைத்து ‘தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை படமாக்கி வருகிறார். இதில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சுவாமி நடித்து வருகிறார். இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் தலைவி குழு தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், படம் குறித்து நடிகர் அரவிந்த் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார்
அதில் அவர் கூறும் போது, “தலைவி படத்தில் புரட்சித்தலைவரின் அழகையும், கவர்ச்சியையும் என்னில் கொண்டுவர உதவிய இவர், இறுதியாக எனக்கு மேக் அப் போட்டுக்கொண்டிருக்கிறார். நன்றி ரஷித் சார். தலைவியின் இறுதிநாள் படப்பிடிப்பு” என்று அவர் பதிவிட்டார்.