மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்ரின் 33 வது நினைவு தினத்தையொட்டி, ‘தலைவி’ படத்தில் எம்.ஜி.ஆர் ஆக நடிக்கும் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கெட்டப்பில் புகைப்படங்களை வெளியிட்டு நினைவு கூர்ந்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானார். திரைப்பட நடிகையாக தனது வாழ்கையைத் தொடங்கிய ஜெயலலிதா பின்னாளில் தமிழகத்தின் மிகவும் கவனிக்கத்தக்க ஆளுமையாக உருவெடுத்தார். சறுக்கல்களும், சாதனைகளும் நிரம்பிய அவரது வாழ்கை வரலாற்றை திரைப்படமாக மாற்றும் முயற்சியில் இறங்கிய கெளதம் வாசுதேவ் மேனன், இயக்குநர் பிரசாந்த் முருகேசனுடன் இணைந்து ‘குயின்’என்ற பெயரில் ரம்யா கிருஷ்ணனை வைத்து ஜெயலலிதாவின் வாழ்கையை வெப் சீரிஸாக எடுத்தார்.
அந்த வரிசையில், இயக்குநர் ஏ.எல்.விஜயும் கங்கனா ரனாவத்தை வைத்து ‘தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை படமாக்கி வருகிறார். இதில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்து வருகிறார். இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் தலைவி குழு தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில் அண்மையில் அரவிந்த்சாமி, இறுதிநாள் படப்பிடிப்பில் இருந்து புகைப்படத்தை பதிவிட்டார்.
இந்நிலையில் , எம்.ஜி.ஆர்ரின் நினைவுதினத்தையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், எம்.ஜி.ஆர் கெட்டப்பில் அரவிந்த்சாமி இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து ”புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்தது ஒரு மரியாதை மட்டுமல்ல, ஒரு பெரிய பொறுப்பு. என்மீது நம்பிக்கை வைத்ததற்காக இயக்குநர் ஏ.எல் விஜய் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றிகள். இந்தப் படங்களை தலைவரின் நினைவகத்தில் தாழ்மையுடன் இடுகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.