பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் நகார்ஜுனா ஒரு வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறார் என்று உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
2019-ல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'தி ஃபேமிலி மேன்' தொடரின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது. அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிய இந்தத் தொடரில் நடிகை சமந்தாவும் பிரதான கதாபாத்திரத்தில் ஈழ தமிழ் பெண்ணாக நடித்திருந்தார். ஈழத் தமிழர்களை சித்தரிக்கும் வகையிலான காட்சிகள் போன்றவை, இந்தத் தொடருக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து 'தி ஃபேமிலி மேன் 2' இணையத் தொடரை தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை பல தரப்புகளில் இருந்தும் முன்வைக்கப்பட்டது. எனினும், இந்தத் தொடரில் சமந்தா நடித்திருந்த ராஜி என்ற கதாபாத்திரம், தமிழ் ரசிகர்களை தாண்டி மற்ற சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
இதனால் அவர் தொடர்ந்து வெப் சீரிஸ் தொடரில் நடிக்க ஆர்வம் தெரிவித்து வருவதாகவும், அடுத்ததாக ஒரு வெப் சீரிஸில் ஒப்பந்தம் ஆகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையே, மருமகள் சமந்தாவின் ஃபார்முலாவை அவரின் மாமனார் நாகார்ஜுனா பின்பற்றி ஒரு வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறார் என்று உறுதியான தகவல்கள் கூறுகின்றன.
இது தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசிய நாகார்ஜுனா, "வெப் சீரிஸ் நடிக்க என்னிடம் இரண்டு கதை வந்துள்ளன. விரைவில் முடிவு தெரிவிக்கப்படும்" என்றுள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக 35 ஆண்டுகளாக கோலோச்சி வரும் நாகார்ஜுனா, தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். சினிமாவை தாண்டி சமீப காலமாக டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். புகழ்பெற்ற கோடீஸ்வரர் நிகழ்ச்சியான, "மீலோ எவரு கோடீஸ்வரடு" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.
இந்த நிலையில்தான் சினிமா, டிவியை தொடர்ந்து தற்போது ஓடிடி தளத்தில் கால்பதிக்க இருக்கிறார். இரண்டாம் உலகப் போர் தொடர்பான கதை மற்றும் டைம் டிராவல் பற்றிய கதை என்று இரண்டு கதைகள் நாகார்ஜுனா ஓடிடி தொடருக்காக கேட்டுவைத்துள்ளார் என்று கூறுகிறது தெலுங்கு திரையுலகம். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.