தமிழ் சினிமாவில் தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரி ரத்து செய்யும் முன்பு வரை 25 சதவீத கேளிக்கை வரி பெறப்பட்டு வந்தது. இந்த வரியில் 90 சதவீத தொகை நேரடியாக அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு சென்று சேரும்.
2006ல் திமுக ஆட்சியின் போது, தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு என்ற சலுகை கொண்டு வரப்பட்டது. இதற்காக அப்போது சொல்லப்பட்ட காரணம் தமிழ் மொழியை வளர்ப்பது. 2006க்கு முன்பு வரி விலக்கு இல்லையா என்றால் இருந்திருக்கிறது. அப்போது ஒரு படம் சமூகத்துக்கு தேவையான கருத்துடன் வரும் போது அதன் மீதான வரி விலக்கப்படும். இதன் பலன் நேரடியாக பார்வையாளனுக்கு பாதி விலையில் டிக்கெட் கிடைப்பதாக வந்தடையும். 2006ல் கொண்டு வரப்பட்ட தமிழ் தலைப்புகளுக்கு வரி விலக்கு வந்த பின்தான் தியேட்டர்களில் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது. தயாரிப்பாளர் தரப்புக்கு லாபமானதாகவும் அதனால் நடிகர்களின் சம்பளம் உயர்ந்தது என்பது இந்த சலுகையின் மீது பொதுவாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டு.
2011ல் அதிமுக ஆட்சி வந்த பின்பு இந்த சலுகைக்கான விதிகள் பல விதங்களில் மாற்றப்பட்டது. தமிழ் தலைப்பு மட்டும் போதாது, சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாகவும் இருக்க வேண்டும். பெரிய ஹீரோக்களுக்கு கோடிகளில் சம்பளம் கொடுப்பவர்கள் வரி சலுகை கேட்பது சரி இல்லை. படம் யூ சான்றிதழ் பெற வேண்டும், தேவைக்கு அதிகமாக பிற மொழியைப் படத்தில் பயன்படுத்தக் கூடாது, வன்முறை ஆபாச காட்சிகள் இருக்கக் கூடாது போன்ற காரணங்கள் முன்வைக்கப்பட்டது. இந்த சூழலில் ஜி.எஸ்.டி வரி உடன் சேர்த்து கேளிக்கை வரியும் செலுத்த வேண்டிய நிலை வந்த போது திரையுலகமே அதிர்ந்தது. 2017ல் மத்திய அரசின் 28 சதவீத ஜி.எஸ்.டி வரியும், 30 சதவீத உள்ளாட்சி கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டது. இதனால் திரைத்துறை பெரிய பாதிப்புக்குள்ளாகும் எனக் கூறி புதுப்படங்களின் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பிறகு கேளிக்கை வரி 10 சதவீதமாக குறைந்தது, மறுபடி பேச்சு வார்த்தை நடத்தி 8 சதவீதமாக குறைக்கப்பட்டது. இப்போதும் கேளிக்கை வரிச்சலுகை என்பது சினிமா சார்ந்த நபர்களுக்கு கட்டும் வரியில் இருந்து விலக்கு கிடைக்கும் வழிதான். காந்தி, காமராஜ், இராமானுஜன் போன்ற படங்கள் வரும் போது இது போன்ற படங்களை பார்க்க மக்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் டிக்கெட் விலையும் குறையும் விதத்தில் சலுகையில் விதிகள் நீட்டிக்கப்படும்.
-கார்கி ஜான்சன்