விஜய்சேதுபதியுடன் கருப்பன் படத்தில் நடித்த தன்யா ரவிச்சந்திரன், தெலுங்குப் படவுலகில் அறிமுகமாகிறார். காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான அவர், சசிக்குமாருடன் பலே 'வெள்ளையத் தேவா' படத்தில் தமிழில் கால்பதித்தார். பின்னர் ராதாமோகனின் பிருந்தாவனம் படத்தில் அருள்நிதியுடன் நடித்திருந்தார்.
தமிழில் வீசிய இந்தப் பூங்காற்று, தற்போது தெலுங்குப் பக்கம் வீசவுள்ளது. ஸ்ரீ சரிபள்ளியின் இயக்கத்தில் கார்த்திக்கேயா கம்மகொண்டாவின் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கார்த்திக்கேயாவின் பிறந்த நாளான செப்டம்பர் 21 ம் தேதியன்று (இன்று) பிறந்த நாள் பரிசாக படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் வொர்க் நிறுவனத்தில் முதுகலை படித்துள்ள தன்யா, தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் நவீன பெண்ணாக வருகிறார். தமிழில் அடுத்து சிபி சத்யராஜூடன் இணைந்து நடிக்கவுள்ளார். புராணகால மர்மங்களைக் கொண்ட த்ரில்லராக உருவாகும் இப்படத்தை புதுமுக இயக்குநர் என். கிஷோர் இயக்குகிறார். இளையராஜா இசை சேர்க்கிறார்.