ஹார்வர்ட் பிசினஸ் பள்ளியில் எஸ்.எஸ்.ராஜமவுலி, தனுஸ்ரீ தத்தா!
ஹார்வர்ட் பிசினஸ் பள்ளியில் உரையாற்றுவதற்காக, இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகை தனுஸ்ரீ தத்தா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு வெளியான ‘ஆசிக் பனாயா ஆப்னே’ என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. பல்வேறு திரைப்படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து பிரபலமான இவர், தமிழில் நடிகர் விஷாலுடன் ’தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இவர் பாலிவுட்டின் மூத்த நடிகர் நானா படேகர் மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் "ஹார்ன் ஒகே ப்ளீஸ்" என்ற திரைப்பட படப்பிடிப்பின் போது, நானா படேகர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, தாக்குதலில் ஈடுபட்டார் என தனுஸ்ரீ கூறினார். தனுஸ்ரீயின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த நடிகர் நானா படேகர், அவர் மீது அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த பிரச்னை பெரிதானதை அடுத்து, நானா படேகர் தான் நடித்து வந்த ’ஹவுஸ்புல் 4’ படத்தில் இருந்தும் விலகினார்.
இதையடுத்து இந்தி சினிமா துறையிலும் மற்ற சினிமா துறையிலும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி நடிகைகள் உட்பட பல பெண்கள், மீ டூ ஹேஷ்டேக்கில் புகார் தெரிவித்தனர். பாலிவுட்டில் மீ டு புகாரை முதன் முதலில் கூறிய நடிகை தனுஸ்ரீதான். இந்நிலையில் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஹார்வர்ட் பிசினஸ் பள்ளியில் பேசுவதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பிசினஸ் பள்ளியின் இந்தாண்டுக்கான இந்திய மாநாடு, வரும் 16 ஆம் தேதி நடக்கிறது. இங்கு படிக்கும் மாணவர்களால் ஏற்பாடு செய்யப் படும் இந்த மாநாட்டில், இந்த வருடம், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, சமூக செயற்பாட்டாளர் அருணா ராய், பத்திரிகையாளர் பர்கா தத், அரசியல்வாதி அசாதுதீன் ஓவைஸி ஆகியோர் பேசுகின்றனர். அவர்களோடு தனுஸ்ரீக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை தனுஸ்ரீ தெரிவித்துள்ளார்.