அரசுப்பள்ளிகளையும், ஆசிரியர்களை இழிவுபடுத்தும் ‘ராட்சசி’ படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியது.
நடிகை ஜோதிகா நடித்து அண்மையில் திரைக்கு வந்த திரைப்படம் ‘ராட்சசி’. ‘சாட்டை’ படம் போல இப்படமும் அரசுப் பள்ளிகளின் நிலையை குறிப்பிட்டுக்காட்டும் விதமாக படமாக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர், “ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராட்சசி’ திரைப்படம் அரசுப் பள்ளிகளை சீர்த்திருந்துவதாக கூறி சேற்றை வாரிப்பூசுகிறது. அரசுப்பள்ளிகளை கேவலப்படுத்தும் நோக்கத்தோடும், ஆசிரியர்களை அசிங்கப்படுத்தி அவதூறு பரப்பும் விதமாகவும் உள்ளது. எனவே இப்படத்திற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
இது தனியார் பள்ளிகளை மறைமுகமாக ஊக்குவிக்கும் முயற்சியாகும். ஒரு ஆசிரியரை உயர்வாக காட்டி ஒட்டுமொத்த அரசுப்பள்ளிகள் மீதும், ஆசிரியர்கள் மீதும் சேற்றை வாரி இறைப்பது எவ்விதத்தில் நியாயம்? சில ஆசிரியர்கள் விதிவிலக்காக கடமையை சரிவர செய்யாலம் இருக்கலாம். ஆனால் இந்த அமைப்பின் சீரழிவுக்கு ஆசிரியர்கள் தான் காரணம் என காட்டப்படுவது கண்டனத்திற்குரியது.
முறையான அங்கீகாரமின்றி இயங்கிய தனியார் பள்ளியில் 94 குழந்தைகள் தீயில் கருகியதே, அதை இனி நடக்காமல் தடுத்திட இரக்கமுள்ள எந்த இயக்குநரும் படம் எடுத்திட வரவில்லை. 2000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறதே மருத்துக்கூட அதுபற்றி வசனமில்லையே. முற்போக்கு சிந்தனை படைத்த இயக்குநர் கல்வியினை அரசே ஏற்று நடத்த வேண்டும் என ஏன் வற்புறுத்தவில்லை ?” இவ்வாறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். மேலும், அரசுப்பள்ளிகளை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள ‘ராட்சசி’ படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளனர்.