‘கோட்டையில்லை, கொடியுமில்லை எப்பவும் நீ ராஜா’ : இளையராஜா பிறந்தநாள் இன்று.!

‘கோட்டையில்லை, கொடியுமில்லை எப்பவும் நீ ராஜா’ : இளையராஜா பிறந்தநாள் இன்று.!
‘கோட்டையில்லை, கொடியுமில்லை எப்பவும் நீ ராஜா’ : இளையராஜா பிறந்தநாள் இன்று.!
Published on

தமிழர்கள் மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இசை அரசனாக வீற்றிருக்கும் இளையராஜாவின் பிறந்தநாள் இன்று..!

‘அவனின்றி ஓரணுவும் அசையாது’ என்பதுபோல, அவரின் இசையின்றி தமிழர்களின் ஒரு நாளும் நகராது. அரை நூற்றாண்டுகாலமாக தமிழர்களின் நாடி, நரம்பு, மூச்சு, பேச்சு, இரத்தம் எல்லாவற்றிலும் இரண்டற கலந்தது இவரின் இசை என்றால் அது மிகையான புகழ்ச்சியல்ல. இந்திப்பாடல்கள் தமிழக வீடுகளில் பிரபலமடைய தொடங்கிய 70 களின் இறுதியில் “வராது வந்த மாமணியாய்” வந்து வீடுதோறும், தமிழ்மக்களின் இதயம்தோறும் நிறைந்தவர்  ‘இசைஞானி’ இளையராஜா.

தனது அண்ணன் பாவலர் வரதராஜனுடன் மேடைகளில், நாடகங்களில் இசை மீட்டிக்கொண்டிருந்த ராசையாவின் திரையிசை அவதாரம் 1976ஆம் ஆண்டில்  ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலமாக தமிழ்சினிமாவில் தடம்பதித்தது. மேற்கத்திய இசையும், தமிழர்களின் பாரம்பரிய இசையும் கலந்த அன்னக்கிளி படத்தின் பாடல்கள் தமிழ்சினிமாவையே ஸ்தம்பிக்கவைத்தது, யார் இந்த ராசையா என அனைவரையும் புருவம் சுருக்கி பார்க்க வைத்தது. 1976 இல் தமிழ்த்திரையிசையின் ராஜாவாக முடிசூடிக்கொண்ட இளைராஜாவின் இசை ஆட்சி இன்னமும் தமிழ்நிலத்தை ஆண்டுகொண்டேதான் இருக்கிறது.

1943 ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் ராமசாமி-சின்னதாயம்மாளுக்கு மகனாக பிறந்த ராசைய்யா, தனது அண்ணன்கள் பாவலர் வரதராஜன், ஆர்.டி,பாஸ்கர் மூலமாக இசைமேடையில் அறிமுகமானார். அன்னக்கிளி மூலமாக இளையராஜாவை தமிழ்சினிமாவில் அறிமுகம் செய்தது பிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம். அன்னக்கிளி படத்திற்கு பின்னர் பாரதிராஜா இயக்கிய ’16 வயதினிலே’ படம் இளையராஜாவை புகழின் உச்சியில் அமர வைத்தது, அதன்பின்னர் இளையராஜா தொட்டதெல்லாம் வெற்றிதான். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தியிலும் இவரின் பாடல்கள் பெரிய வரவேற்பைபெற்றன.  நாட்டுப்புற இசையில் பயணத்தை தொடங்கிய இளையராஜா, ஆகச்சிறந்த கர்நாடக இசைப்பாடல்களையும், மேற்கத்திய பாணி பாடல்களையும் உருவாக்கியவர்.

லண்டன் டிரினிட்டி மியூசிக் தொலைதூர கற்றலில் கிளாசிகல் கிதார் வாசிப்பில் தங்கப்பதக்கம் வென்றவர் இளையராஜா, லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்த ஆசியாவின் முதல் இசையமைப்பாளர் என்ற சிறப்பை பெற்றவரும் இவர்தான், இதனால்தான் இவர் மேஸ்ட்ரோ என்றும் புகழப்படுகிறார். திருவாசகத்துக்கு இவர் உருவாக்கிய சிம்பொனி அனைவரின் பாராட்டையும் பெற்றது. 2013 ஆம் ஆண்டில் இந்திய சினிமாவின் 100 வது ஆண்டை கொண்டாடும் சிஎன்என்-ஐபிஎன் கருத்துக்கணிப்பில் இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் இவர், அதுபோல அமெரிக்க உலக சினிமா போர்ட்டல் ‘டேஸ்ட் ஆஃப் சினிமா’ பட்டியலிட்ட 25 சிறந்த இசையமைப்பாளர்களில் உலக அளவில் 9 ஆவது இடம் பிடித்தார் இளையராஜா.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும், ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கும் இசையமைத்துள்ள இளையராஜாவின் பின்னணி இசைக்கோர்வை உயிர்த்துவம் மிக்கது. இவரின் பின்னணி இசைக்காகவும், திரைப்பாடல்களுக்காகவுமே பல படங்கள் ஹிட் அடித்திருக்கின்றன என்பது உண்மை. இளையராஜாவுக்கு நாட்டின் உயரியவிருதுகளான பத்மவிபூஷன்(2018) மற்றும் பத்மபூஷன்(2010) விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளன.  இவர் இதுவரை இரண்டு தமிழ், இரண்டு தெலுங்கு, ஒரு மலையாளம் என மொத்தம் ஐந்து படங்களுக்காக தேசிய விருதை வென்றுள்ளார். இதுதவிர தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மத்திய பிரதேச அரசின் பல விருதுகளையும், இரண்டு கெளரவ டாக்டர் பட்டங்களையும் வென்றுள்ளார் இளையராஜா.

தமிழ்நாட்டை சுற்றிய மற்ற மாநிலங்களில் 70 களில் தொடங்கி இப்போதுவரை இந்தி பாடல்கள் மிக பிரபலமாகவே உள்ளது. ஆனால் மற்ற மொழி பாடல்களை நோக்கி மனமே செல்லாத வகையில், தமிழர்களின் காதுகளில் தேன் சொட்ட சொட்ட தமிழை புகுத்திய பெருமை இளையராஜாவையே சேரும்.

-வீரமணி சுந்தரசோழன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com