2023-ம் ஆண்டு முடிய இன்னும் ஒருசில தினங்களே மீதமிருக்கும் நிலையில், ஆண்டின் மொத்த நினைவுகள், நிகழ்வுகளையும் ஒருமுறை நினைவுபடுத்தும் விதமாக 'REWIND 2023' என்ற தலைப்பில் சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது புதிய தலைமுறை. அந்த வகையில் இந்தாண்டு தமிழ் சினிமாவில் அதீத வன்முறை காட்சிகளுடன் வெளியான படங்கள், அவை ஏற்படுத்திய தாக்கம் குறித்து பேசும் முயற்சியே இந்த சிறப்புத் தொகுப்பு.
தமிழ் சினிமாவில் நடப்பு ஆண்டு வெளியான பெரிய படங்கள் குறித்து பேசத் தொடங்கினால், ஜெயிலர், லியோ படங்களை தவிர்த்துவிட்டு பேசமுடியாது. இந்த படங்களில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருந்தது என்பதைவிட, வன்முறைக் காட்சிகளில்தான் இத்திரைப்படங்கள் இருந்தன என்றே சொல்லலாம். இந்த பட்டியல் ஜெயிலர் படத்தில் தொடங்கி ரத்தம், போர் தொழில், லியோ, அனிமல் மற்றும் தற்போது வெளியாகியுள்ள சலார் வரை நீண்டுள்ளது. என்னதான் பல ஃபீல் குட் திரைப்படங்கள் வந்தாலும், அவற்றுக்கு கிடைக்கும் ஓபனிங்-ஐ விட இந்த படங்களுக்கு இருக்கும் ஓபனிங் மிகப்பெரியது. காரணம், அதில் நடிக்கும் நாயகர்கள்.
சாதாரண படங்களைத் தாண்டி, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி, விஜய் மற்றும் அஜித் போன்றவர்கள் தங்களது திரைப்படத்தேர்வு மற்றும் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். நடுத்தர வயதினரைக் கடந்து குழந்தைகள் கொண்டாடும் நடிகர்கள் என்றால் அந்த பட்டியலில் ரஜினி, விஜய் மற்றும் அஜித் போன்ற நடிகர்கள் முன்னணியில் இருக்கின்றனர். இவர்களின் படங்கள் வெளியாகும்போதெல்லாம் வீட்டில் இருக்கும் நண்டு, சிண்டு முதல் வயதானவர்கள் வரை குடும்பத்துடன் படம் பார்ப்பார்கள். ஆனால் ஆண்டின் தொடக்கத்தில் வெளியான அஜித்தின் துணிவு படத்தில் வன்முறைக்காட்சிகள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது. தொடர்ந்து, ரத்தம், போர் தொழில் போன்ற படங்களிலும் வன்முறைக்காட்சிகள் நிறைந்திருந்தன. இவை அனைத்தையும் கடந்து, ஆகஸ்ட்டில் வெளியான ஜெயிலர் படத்தில் வன்முறைக்காட்சிகள் தலைதூக்கியது.
பார் சீனுக்குப் பிறகான காட்சியில், தன்னைப் பின் தொடர்ந்து வரும் ரவுடியின் தலையை ரஜினி கொய்வது, கழுத்தில் கத்தியை ஏற்றுவது என்று அதீத வன்முறைக்காட்சிகள் அப்படியே படம்பிடித்து காட்டப்பட்டன. தொடக்க காட்சியிலேயே வில்லன் விநாயகன் ஏதோ ஒரு அண்டர் கிரௌண்ட்டில் சிலரை ஆசிட் மூலம் கொலை செய்வதில் இருந்துதான் தொடங்கும். இவை மட்டுமின்றி, “உன்ன கண்டந்துண்டமா வெட்டி கலச்சி போட்டுடுவேன். நீதான்னு கண்டுபிடிக்கவே மூணு நாள் ஆகும்” என்ற வசனங்கள் எல்லாம் உச்சகட்டம் என்றே சொல்லலாம். மேலும் காட்டிக்கொடுத்தவர்களை மோகன்லால் அடித்தே சாகடிக்கும் காட்சிகளும் அப்படியே காட்டப்பட்டிருக்கும். குடும்ப ரசிகர்கள், பார்வையாளர்கள் பார்க்கும் படத்தில் இத்தகைய வன்முறை நிறைந்த காட்சிகள் வைக்கப்படும்போது, அதில் ரஜினி போன்ற நடிகர்கள் பொறுப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும்.
அடுத்ததாக வெளியான நடிகர் விஜய்யின் லியோ படத்திலும் வன்முறை காட்சிகள் இடம்பெற்றன. தற்போது பேன் இந்தியா படமாக வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் அனிமல் மற்றும் சலார் படங்களிலும் இதே நிலைதான். அனிமல் திரைப்படத்தைப் பொறுத்தவரை, படம் முழுவதும் வன்முறைக்காட்சிகள், ஆணாதிக்க சிந்தனை காட்டப்பட்டிருந்தது. கீதாஞ்சலியிடம் ‘உன் இடை பெரிதாக இருக்கிறது. உன்னால் எனக்கு ஆரோக்கியமான பிள்ளைகளை பெற்றுத்தர முடியும்’ என்று விஜய் சிங் காதலை வெளிப்படுத்தும் விதமே படத்தின் அழகை(!) சொல்லிவிடும். அதிகமாக இரட்டை அர்த்த வசனங்கள், தலையை வெட்டுவது, கையை வெட்டுவது என்று தொடங்கி, கழுத்தை அறுப்பது வரை அப்படியே காட்டுவது என்று படத்தில் உச்சபச்ச வன்முறைக்காட்சிகள் இடம்பெற்றிருந்தன. 4 பேரை ரத்தம் தெறிக்க கொன்றால் படம் ஹிட் ஆகிவிடும் என்று நினைத்துவிட்டார்கள் போல. மேலும், சலார் படம் முழுவதும் இதே நிலைதான். கையை வெட்டுவது, தலையை வெட்டுவது போன்ற காட்சிகள் சற்றும் மறைக்கப்படாமல் அப்படியே காட்டப்பட்டன. ஓவர் பில்டப், வன்முறைக்காட்சிகள் என்று விமர்சனங்களைப் பெற்றுள்ளன. பெரிய படம், பேன் இந்தியா படம் போன்ற படங்களில் நடிக்கும் முன்னணி நடிகர்கள் பொறுப்புணர்வோடு வன்முறைக்காட்சிகளில் நடிக்க வேண்டும் என்ற கருத்து மேலோங்கியுள்ளது.
சமூதாயத்தின் பிரதிபலிப்பு சினிமா என்றால், சினிமாவின் தாக்கத்தை சமுதாயத்திலும் காணலாம். 100 மேடைகள் அமைத்து சொல்ல வேண்டிய கருத்தை ஒரே திரைப்படம் சிறப்பாக கொண்டு சேர்த்துவிடும். இது நல்ல கருத்துக்கும் பொருந்தும், வன்முறையை கற்பிப்பதற்கும் பொருந்தும். ஒரு காலகட்டத்தில் ஆபாச நடனப்பாடல்கள் இருந்தால் படம் வெற்றிபெற்றிவிடும் என்ற போலித்தனமான போக்கு இருந்தது போல, இப்போதைக்கு வன்முறைக்காட்சிகள் இருந்தால் படம் வெற்றிபெற்றுவிடும் என்ற போக்கில் சினிமா பயணித்து வருகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்படும் படங்கள், உதாரணத்திற்கு ஜெய் பீம் போன்ற கதைக்களத்திற்கு வன்முறைக் காட்சிகள் அவசியமானதாக இருக்கின்றன. காரணம், உண்மையில் அரசு அதிகாரிகளின் வக்கிரமான புத்தி, எப்படி எல்லாம் மக்கள் துன்புறுத்தப்பட்டார்கள் என்பதை ஆவணப்படுத்துவதற்காக வன்முறைக்காட்சிகள் காட்டப்படுகின்றன.
இது விடுதலை படத்திற்கும் பொருந்தும்.. வீரப்பன் வெப் சீரிஸிற்கும் பொருந்தும். இதுபோன்ற படங்களில் காட்டப்படும் வன்முறையை பார்க்கும் இப்போதைய முன்னணி இயக்குநர்கள், தங்களது படத்திலும் கொஞ்சமும் தேவையற்ற வன்முறைக்காட்சிகளை திணித்து வருகின்றனர். இந்த வரிசையில் முன்னணியில் இருப்பவர்கள் நெல்சன் மற்றும் லோகேஷை சொல்லலாம்.
ரம்மி போன்ற சூதாட்ட ஆன்லைன் விளையாட்டுக்களால் பண இழப்பு, அதனால் ஏற்படும் தற்கொலைகளைப் போல, வீடியோ கேம்களாக இருக்கும் ஃப்ரீ ஃபயர், பப்ஜி போன்ற விளையாட்டுக்களும் மனரீதியாக சிறுவர்களை அதிகம் பாதிக்கின்றன. இதுபோன்ற விளையாட்டுகளை தொடர்ச்சியாக விளையாடி அதனால் மனநலம் பாதிக்க்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இதுபோன்ற விளையாட்டுக்களில் வெட்டுவது, துப்பாக்கியால் சுடுவது, எதிரியை கொல்வது மட்டும்தான் இலக்காக இருக்கும். இவை சிறுவர்களின் மனதில், கொலை, வன்முறை போன்றவற்றை மிகவும் சாதாரணமாக்குகிறது. இந்த வரிசையில் தடை செய்யப்பட்ட ஃப்லு வேல் கேமையும் சொல்லலாம். அப்படி, வீடியோ கேம்களால் மனரீதியாக சிறுவர்கள் பாதிக்கப்படும் நிலையில், அதை பிரதிபலிக்கும் விதமாக திரைப்படங்களிலும் வன்முறை காட்சிகள் காட்டப்படுகின்றன.
தணிக்கை வாரியத்தில் அரசியலா?
திரைப்படங்களில் இடம்பெறும் காட்சிகள், வசனங்கள் போன்றவற்றை தணிக்கை செய்யும் தணிக்கை வாரியம், படத்திற்கான காட்சிகளை பொறுத்து அவற்றுக்கு ஏஎ, யு/ஏ உள்ளிட்ட சான்றுகளை வழங்கி வருகின்றன. அதன்படி, ‘ஏ’ சான்றிதழ் தரப்படும் படங்களை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கலாம். ‘யு/ஏ’ - 12 வது வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றோர்களுடன் பார்க்கலாம். ‘யு’ - அனைவரும் பார்க்கலாம். ‘எஸ்’ - சில சிறப்பு குழுவினர் மட்டும் பார்க்கலாம் என்று சான்றுகள் கொண்டுக்கப்படுகின்றன. அதீத வன்முறை, ஆபாச காட்சிகள், வசனங்கள், வன்முறை வசனங்கள் உள்ளடக்கிய படங்களுக்கு ஏ சான்று கொடுப்பதே வழக்கம். ஆனால், சமீபத்தில் வெளியாகி வரும் ஜெயிலர், லியோ போன்ற படங்களானாலும் சரி, முன்பு வெளியான பீஸ்ட், விக்ரம் போன்ற படங்களிலும் சரி ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இருந்தபோதும், யு/ஏ சான்றிதழே வழங்கப்பட்டது. பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு தணிக்கை வாரியம் இதுபோன்ற பாரபட்சமான முறையை கையாள்வதாக விமர்சனம் எழுந்து வருகிறது. இதுபோன்று பாரட்சம் பார்க்காமல், சமரசமின்றி படங்களுக்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் விமர்சகர்கள், பார்வையாளர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
தமிழ் சினிமா உள்ளிட்ட இந்திய சினிமாவில் வன்முறைக்காட்சிகள் அதிகரித்து வருவது குறித்து திரை விமர்சகர் சுகுணா திவாகரிடம் பேசினோம். அவர் கூறியது பின்வருமாறு, “தமிழ் சினிமாவைப் பொருத்தவரை வன்முறைக் காட்சிகள் வைப்பதில் போட்டி நிலவுகிறது. உச்ச நட்சத்திரங்களான ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் படங்களை குழந்தைகள் பார்க்கின்றனர். தமிழ் சினிமாவில் வன்முறை காட்சிகள் எம்.ஜி.ஆர் காலம்தொட்டே இருந்து வருகிறது. ஆனால், அவை எல்லாம் வேடிக்கையானதாக இருக்கும். அது ரஜினி படங்களில் தூக்கலாக இருந்து வந்தாலும், இப்போது வரும் ரஜின், விஜய் படங்களில் வன்முறை காட்சிகள் அதிகம் இருக்கின்றன.
ஜெயிலர் படத்தில் தலையை வெட்டுவதோடு ரஜினி பேசும் வன்முறை வசனத்தை குழந்தைகள் பேசுகின்றனர். குழந்தைகள் மனதில் இப்படியாக வன்முறை சென்று சேர்கிறது. கலைப்படைப்பில் வன்முறை உள்ளிட்ட அனைத்துமே இடம்பெறலாம் என்றாலும், வன்முறை எவ்வளவும் கொடூரமானது என்று எதிர்ப்பு மனநிலையோடு காட்டலாம். ஆனால், ரசிக்கத்தக்க வகையில், அதை மற்றவர்கள் பின்பற்றும் வகையில் காட்டக்கூடாது. ஜெய்பீம், விசாரணை, வீரப்பன் போன்ற படங்களில் ஆவணப்படுத்தவே அவை காட்டப்படுகின்றன. அது மக்களுக்கான புரிதலுக்காக காட்டுப்படுபவை. சித்ரவதை, மனித உரிமை மீறல் போன்றவற்றை வெளிக்காட்ட காட்சிப்படுத்தலாம்.
வன்முறைக்காட்சிகள் அதிகம் வைப்பது அடிப்படையிலேயே தவறானது. நேரடி வன்முறைக் காட்சியை காட்டாமலும் அதை விளக்கலாம். எடுத்துக்காட்டுக்கு ஆடுகளம் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் தனுஷின் கேள்விக்காக பேட்டைக்காரன் கழுத்தறுத்துக்கொண்டு இறப்பது காட்டப்பட்டது. ஒரு வார்த்தையில் வன்முறை வெளிப்பட்டது. கழுத்து அறுத்து ரத்தம் சொட்டுவதை காட்டவில்லை. வன்முறையை அழகியலாக மாற்றி சித்தரிப்பதை நுட்பமாக செய்கின்றனர்.
இதுபோன்ற படங்களில் வன்முறைக்காட்சிகளை எடுத்துவிட்டால், படத்தில் ஒன்றுமே இருக்காது. ஆனால், வன்முறையை மட்டுமே பயன்படுத்தி படத்தை விற்பனை செய்துவிடுகின்றனர். கதை, கதாப்பாத்திரத்திற்கான முக்கியத்துவம் வெகுவாக குறைந்துவிட்டது. பாரதி ராஜா, தங்கர் பச்சான் போன்ற இயக்குநர்கள் போன்று, மண் சார்ந்த, மக்கள் சார்ந்த கதையை எடுக்காமல், வன்முறையை மட்டுமே மையமாக வைத்து எடுப்பது பரிதாபகரமானது. தமிழ் சினிமவுக்கே இது துயரமான விஷயம்தான்” என்றார்.
தொடர்ந்து தணிக்கை வாரியம் குறித்து பேசியபோது, “ஜெயிலர் போன்ற படங்களுக்கு யு/ஏ சான்று கொடுத்திருப்பதில் அரசியல் மற்றும் பாரபட்சம் இருக்கிறது. அரசியல் பேசும் படங்களுக்கு நெருக்கடி அதிகமாக இருக்கிறது. ஆனால், ஜெயிலர் போன்ற படங்கள் எவ்வளவு வன்முறையாக இருந்தாலும் யு/ஏ சான்றுடன் வெளிவருகின்றன. ஒரு சாதாரண மசாலா கதையில், தேவையில்லாமல் வன்முறை திணிக்கப்படுகிறது. இதுபோன்ற படங்கள் கட்டுப்பாடுகளை கடந்து வெளியாகின்றன.”
வக்கிரமான மனநிலையில் படைப்பாளிகள்!
“படத்தில் அதிகப்படியான வன்முறை திணிக்கப்படுவது, படைப்பாளிகளின் வக்கிரமான மனநிலையைத்தான் காட்டுகிறது. படைப்பாளில் எந்த அளவுக்கு சுதந்திரத்தை கேட்கின்றார்களோ, அதே அளவுக்கு பொறுப்புணர்வோடும் செயல்பட வேண்டும். இப்போதைய காலகட்டத்தில், வன்முறை என்பது அதிர்ச்சியானதாக இல்லாமல், சாதாரண ஒரு விஷயமாக மாற்றப்படுகிறது. போதைப்பொருட்களை எதோ, மிளகாய்த்தூள் விற்பனைப்போன்று மிக எளிதாக வன்முறையை மிகைப்படுத்துகின்றனர். வன்முறை இல்லாமல் வெளியாகும் குட் நைட் போன்ற ஃபீல் குட் படங்களும் வரவேற்பையே பெறுகின்றன. இன்னும் காட்சிப்படுத்தப்பட வேண்டிய நிறைய கதைகள் இருக்கின்றன. படைப்பாளிகள் இன்னும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்” என்றார்.
தமிழ் திரைப்படங்களைத் தாண்டி, தமிழிலும் வெளியாகும் பேன் இந்தியா படங்களிலும் வன்முறைக் காட்சிகள் தூக்கலாகவே இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு சமீபத்தில் வெளியான அனிமல் மற்றும் சலார் படங்களைச் சொல்லலாம். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தொடங்கி, வெளியீட்டு போஸ்டர் வரை ரத்தம் தெறிக்க போஸ்டர்கள் வெளியாகின்றன. இந்த ஆண்டில் பார்க்கும்போது, லியோ ஃபர்ஸ்ட் லுக் தொடங்கி, ஜெயிலர், லத்தி, அனிமல், சலார் மற்றும் விஜய்சேதுபதியின் மகாராஜா உட்பட படத்தின் போஸ்டர்கள் அனைத்தும் ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியாகின்றன.
இந்த ஆண்டில் வெளியான உச்ச நட்சத்திரங்களில் படங்களில் எந்த அளவுக்கு வன்முறை மிகுந்திருந்ததோ, அதற்கு நேர்மாறாக டாடா, குட் நடை, பார்க்கிங், ஜோ, அயோத்தி மற்றும் இறுகப்பற்று போன்ற ஃபீல் குட் திரைப்படங்கள் வன்முறைக் காட்சிகள் இன்றி பேசவேண்டிய கதைக்களங்களை கொண்டிருந்தன. மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றன. வன்முறைக்காட்சிகளை வைத்தால்தான் மக்கள் ரசித்துப்பார்க்கின்றனர் என்று சாக்கு சொல்லாமல், கதைக்கு தேவையான காட்சிகளை வைத்து சிறந்த படைப்புகளை கொடுக்க வேண்டும் என்பதே பார்வையாளரக்ளின் கருத்தாகும்.