மூன்றுமுகம் படத்தை அப்படியே காப்பி அடித்தாக இயக்குநர் அட்லிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஷங்கரிடம் பயிற்சி பெற்றவர் அட்லி. அதற்கான சாயலை அவர் படத்தில் காட்சிக்கு காட்சி காணலாம். இவர் இயக்கிய ‘ராஜா ராணி’ அப்படியே மெளனராகத்தின் தழுவல் என பலர் விமர்சனம் எழுதினார்கள். அதனை அட்லி மறுக்கவோ வரவேற்கவோ இல்லை. ஒரே படத்தை தழுவினால் தானே பிரச்னை. இரண்டு படங்களை கலந்துவிட்டால்? பிரச்னை வராது இல்லையா? என்று அபூர்வ சகோதரர்கள், மூன்றுமுகம் என பல கலவைகள் கலந்து மெர்சலைத் தந்திருக்கிறார் என விமர்சனங்கள் எழுந்தன. இந்தப் படத்தின் சக்சஸ் சந்திப்புக்காக கமலை சந்திக்கப் போனபோது விஜயும் அட்லியும் அவருடன் போட்டோ எடுத்து கொண்டனர். அந்த போட்டோவில் அவர்கள் மூவருக்கும் பின்னணியில் அபூர்வ சகோதரர்கள் போஸ்டர் தெரிந்தது. அது தற்செயலானதல்ல என நெட்டிசன்கள் பதிவு போட்டனர். கமல் இது பற்றி கவலைப்படவில்லை.
ஆனால் ஃபைவ் ஸ்டார் ஃபிலிம் நிறுவனம் அப்படி விடுவதாக இல்லை. இலவசமாகவே ரீமேக் செய்து கொள்வதை பெருந்தன்மையாக விட முடியாது என அந்த நிறுவனத்தின் தரப்பில் கூறுகிறார்கள். மூன்றுமுகம் படத்தின் ரீமேக் உரிமையை இந்த நிறுவனம் பெற்றிருக்கும் நிலையில் அட்லி அப்பட்டமாக காப்பி அடித்திருப்பதாக இந்த நிறுவனம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தள்ளது. ஆகவே இது குறித்து அட்லிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது சங்கம். கூடவே ரீமேக்கிங் இயக்குனர்கள் மத்தியில் ப்ரீமேக்கிங் இயக்குனர் அட்லீ என தயாரிப்பாளர் சங்கம் விமர்சித்துள்ளது. ஏற்கெனவே சிறந்த காப்பி அண்ட் பேஸ்ட் இயக்குநர் அட்லி என நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சித்திருந்து குறிப்பிடத்தக்கது.