கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைக்கு திரைப்படங்களை வெளியிட கட்டுப்பாடு இல்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ், பொங்கல் நாட்களில் தயாரிப்பாளர்கள் விருப்பத்திற்கேற்ப திரைப்படங்களை வெளியிடலாம் என கூறியுள்ளது.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புதிய திரைப்படங்கள் வெளியீட்டு குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், திரைப்பட விநியோகஸ்தர்கள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பல தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டம் குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “டிசம்பர் 14ம் தேதி அன்று நிறைய திரையரங்குகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிமகாக இருப்பதல் அன்றைய தினம் சில திரைப்படங்கள் வரலாம் என்று பேசப்பட்டது. ஆனால், எந்தத் தயாரிப்பாளரும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
டிசம்பர் 21 மற்றும் ஜனவரி 10ம் தேதிகளில் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்களது திரைப்படங்கள் விடுமுறை தினத்தன்றுதான் வெளிவர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அப்படி வெளிவந்தால் தங்களுக்கு எந்தவித நஷ்டமும் ஏற்படாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் ஆகிய இரு தேதிகள் தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களது திரைப்படங்களை வெளியீட்டுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் அன்று ‘மாரி2’, ‘சீதக்காதி’, ‘கானா’, ‘அடங்கமறு’ உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.