ஜி.வி. பிரகாஷ், காயத்ரி சுரேஷ் நடிப்பில் உருவாகி வந்த '4G' திரைப்படத்தின் இயக்குநர் அருண் பிரசாத் சாலை விபத்தில் உயிரிழந்தது திரையுலகினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குநர் ஷங்கரிடம் 'ஐ' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் அருண் பிரசாத். இவர் ஜி.வி. பிரகாஷை கதாநாயகனாக வைத்து '4G' என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். படத்துக்காகத் தனது பெயரை வெங்கட் பக்கர் என்று மாற்றியிருந்தார். சி.வி.குமார் தயாரிப்பில் வேல்ராஜ் ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷ் இசை என இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுகளாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் பல்வேறு காரணங்கள் காரணமாக இத்திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.
மேட்டுப்பாளையம் அருகில் இருக்கும் அன்னூரிலிருந்தார் அருண். இன்று காலை தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் எதிர்புறம் வந்த டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே அருண் உயிரிழந்தார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் ஷங்கர் "என்னுடைய முன்னாள் உதவி இயக்குநரான அருண் மரணமடைந்த சம்பவம் என் இதயத்தை உடைத்துவிட்டது. நீ எப்போதும் இனிமையாகவும், நேர்மறையாகவும், கடின உழைப்பாளனாகவும் இருந்திருக்கிறாய். உன்னைப் பிரிந்துவாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களும், பிரார்த்தனைகளும்" எனப் பதிவிட்டுள்ளார்.