விவசாயிகளைப் போல் திரைப்பட தயாரிப்பாளர்களும் நெருக்கடி நிலையில் உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ்ராஜ், “தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டி கொடுமை கண்டிக்கத்தக்கது. கந்துவட்டி கொடுமையால் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு யார் யார் காரணமோ அவர்கள் மனசாட்சியை கேட்டுக் கொள்ள வேண்டிய நேரம் இது” என்றார்.
மேலும், “திரைத்துறையில் 90 சதவீதம் சிறு படத்தயாரிப்பாளர்கள் தான் உள்ளனர். கடன்வாங்கி தான் படம் எடுக்கிறோம். திருட்டு விசிடியால் தயாரிப்பாளர்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற இயலவில்லை. தமிழ் திரையுலகில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. அதிக செலவு, கருப்பு பணம் உள்ளிட்டவற்றை திரைத்துறை தவிர்க்க வேண்டும். சட்டப்பூர்வமாக(Legal) வியாபாரம் செய்ய வேண்டிய காலத்துக்கு வந்திருக்கிறோம்.
பெரிய சம்பளம் வாங்குவோர் 10 சதவீதம் பேர் மட்டும் தான் உள்ளனர். மற்றவர்கள் சாதாரண நிலையில் தான் உள்ளனர். அரசு திரையுலகினரின் கந்துவட்டி பிரச்சனையில் தலையிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக தயாரிப்பாளர் கவுன்சில் உள்ளது. வேறுஎந்த முடிவுகளையும் எடுக்காமல் தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு வாருங்கள். ஒன்றுகூடி சம்மந்தபட்டவர்களிடம் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வோம்” என்று கூறினார்.